Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 12 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால், இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற நகரம் லோஸ் ஏஞ்சல்ஸ். இங்குதான் ஹாலிவுட் பகுதி உள்ளது. முன்னணி திரைப்பட நிறுவனங்கள், திரைப்பட நகரங்கள் உள்ளதால் ஹாலிவுட் திரையுலகின் தலைநகராக லோஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. கடந்த 7-ம் திகதி இங்கு ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து 5 நாட்களாக வேகமாக பரவி வருகிறது. கடந்த 8 மாதங்களாக போதிய மழை பொழிவு இல்லாததால் வறண்டு காணப்பட்ட இப்பகுதியில் ஏற்பட்ட தீ, பலத்த காற்று வீசியதன் காரணமாக காட்டுத் தீயாக மாறி வேகமாக பரவியது. இதனால், லட்சக்கணக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வெளியேற வேண்டிய கட்டாயத்தில் மேலும் பல லட்சம் மக்கள் உள்ளனர்.
காட்டுத் தீ பரவுவதைப் பொறுத்து பகுதி பகுதியாக வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 91 வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெளியேற தயாராக இருக்குமாறு 64 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. லோஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் 1,44,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நகரம் முழுவதிலும் 6 பகுதிகள் தீ விபத்துகளால் எரிந்து வருகின்றன.
லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், தங்கள் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், மாணவர்கள் வெளியேறுவதற்கு தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை ஒட்டிய ஒரு பகுதிக்கு அரசு வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
கலிபோர்னியாவின் மாலிபு கடல்முனை பகுதியில் 13,000 ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவியுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு மாலிபுவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போதைய தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், “அந்தக் காட்டுத் தீயும் காற்றினால் தூண்டப்பட்டது. அதே வானிலை நிகழ்வு, தற்போதைய தீயை கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது. நாங்கள் இங்கிருந்து எங்கு செல்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. எங்கள் அண்டை வீட்டார் வெளியேற்றப்பட்டுவிட்டனர். தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதைப் பார்ப்பது மிகவும் பேரழிவை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
லோஸ் ஏஞ்சல்ஸைச் சுற்றியுள்ள 6 காட்டுத் தீ விபத்துகள் கிட்டத்தட்ட 38,000 ஏக்கர் நிலத்தை எரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகள் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் தவிக்கின்றனர்.
லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மக்கள் சமூக ஊடக செயலியான டிக்டாக் மூலம், வீடுகளை இழந்த மக்களுக்கு நன்கொடைகளைப் பெற்று விநியோகிக்கின்றனர். நடிகர் ஆன்டணி ஹாப்கின்ஸின் வீடு தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. பாலிசேட்ஸ் தீ விபத்தில் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகளில் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் சர் ஆன்டணி ஹாப்கின்ஸின் வீடும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ட் டால்போட்டைச் சேர்ந்த ஆன்டணி ஹாப்கின்ஸ், "நாங்கள் எங்களுடன் எடுத்துச் செல்வது அன்பு மட்டுமே" என்று அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
ரியாலிட்டி நட்சத்திரம் பாரிஸ் ஹில்டன், நடிகர் பில்லி கிரிஸ்டல், ஆஸ்கார் விருது பெற்ற பாடலாசிரியர் டயான் வாரன், தி பிரின்சஸ் பிரைட் நட்சத்திரம் கேரி எல்வெஸ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். தீயில் எரிந்து சாம்பலாகிவிட்ட தங்கள் வீடுகளைப் பார்க்க வரும் மக்களில் பலர், தங்களின் விலைமதிப்பு மிக்க பொருட்களைக் கண்டுபிடிக்க சாம்பலை துழாவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம், தீ தொடர்பான புதிய வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இன்லேண்ட் எம்பயர், சான் பெர்னார்டினோ கவுண்டி மலைகள், சாண்டா அனா மலைகள் மற்றும் உள்நாட்டு ஆரஞ்சு கவுண்டியில் மணிக்கு 45 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இத்தகைய வானிலை காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயில் உயிரிழந்தவர்களுக்கு போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். தீயை கட்டுப்படுத்த போராடும் பணியாளர்களின் முயற்சிகள் வெற்றி பெற அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
33 minute ago
56 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
56 minute ago
2 hours ago
3 hours ago