2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஐ.அமெரிக்க செனட்டைக் கண்டிக்கிறது சவூதி

Editorial   / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில் சவூதி அரேபியா மேற்கொண்டுவரும் போர், ஊடகவிய லாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை ஆகியன தொடர்பில், ஐக்கிய அமெரிக்காவின் செனட்டால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கண்டித்துள்ள சவூதி அரேபியா, அவற்றை, “தலையீடுகள்” என வர்ணித்துள்ளது. அத்தோடு, இவ்வாறான செயற்பாடுகள், இரு நாடுகளுக்குமிடையிலான உறவைப் பாதிக்குமெனவும் அந்நாடு எச்சரித்துள்ளது.

ஐ.அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கட்சியான குடியரசுக் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் செனட், கடந்த வியாழக்கிழமையன்று, யேமனில் இடம்பெற்றுவரும் போரில், ஐ.அமெரிக்காவின் உதவிகளை நிறுத்துவதற்காக வாக்களித்தது. அதேபோல், அதற்கு முன்னதாக, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு, சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தான் காரணமெனத் தெரிவித்து, தீர்மானமொன்றையும் நிறைவேற்றியிருந்தது.

சவூதியைத் தனது மிக முக்கியமான தோழமை நாடாகக் கருதும் ஜனாதிபதி ட்ரம்ப், ஊடகவியலாளர் கஷோக்ஜியின் கொலைக்குப் பின்னரும், சவூதிக்கான முழுமையான ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார். எனவே, செனட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அவருக்கான விமர்சனங்களாகக் கருதப்படுகின்றன.

ஆனால், செனட்டின் இந்தத் தீர்மானங்களை, முக்கியமானவையாகக் கருதியுள்ள சவூதியின் வெளிநாட்டு அமைச்சு, உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும், “சவூதியின் உள்விவகாரங்களில் அப்பட்டமான தலையீடு” எனவும், விமர்சித்துள்ளது.

அத்தோடு, தமது ஆட்சியாளர்கள் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவற்றை நிராகரிப்பதாகவும், சவூதி தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X