2021 மே 17, திங்கட்கிழமை

கட்டார் பிரச்சினை மேலும் வலுக்கிறது

Editorial   / 2017 ஜூன் 08 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் மீது பொருளாதாரத் தடையொன்றை விதிக்கவுள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்ததுடன், எந்தவொரு தெரிவும் இருப்பதாக பஹ்ரேய்ன் தெரிவித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் தணிவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்பட்டிருக்கவில்லை.   

வளைகுடா நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் மேலும் விரிவடைவதைத் தடுப்பதற்கான முயற்சியில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், குவைத் மன்னர் ஷெய்க் சபாஹ் அல் அஹமட் அல் சபாஹ் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே, ஐக்கிய அரபு அமீரகத்தினதும் பஹ்ரேய்னினதும் மேற்கூறப்பட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.   

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேய்ன் ஆகிய நாடுகள், எகிப்துடன் இணைந்து, வளைகுடா நாடான கட்டாருடன், இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்தமையைத் தொடர்ந்தே, வளைகுடா நாடுகளுக்கிடையே பிரச்சினைகள் தோன்றியிருந்தன.   

இந்நிலையிலேயே, தேவைப்பட்டால், கட்டார் மீது மேலும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்த, ஐக்கிய அரபு அமீரக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அன்வர் கர்கஷ், கட்டாருக்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கட்டாரில் புதிய தலைமத்துவத்தை எதிர்பார்த்தல்ல என்று கூறியுள்ளார்.   

இதேவேளை, பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக, சவூதி அரேபியாவுக்கு,நேற்று முன்தினம் (06) விஜயம் செய்த குவைத் மன்னர், நேற்று  (07), ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கட்டாருக்குச் சென்றிருந்தார்.   

இந்நிலையில், வெளியுதவி இல்லாமல், கட்டாருடனான பிரச்சினைகளை, தமக்குள்ளே தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த சவூதி வெளிவிவகார அமைச்சர் அடேல் அல்-ஜுபைர், வழமையான உறவுகளை மீண்டும் கொண்டுவருவதற்கு, என்ன செய்யப்பட வேண்டும் என்று கட்டாருக்குத் தெரியுமென்று கூறியுள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .