Editorial / 2018 நவம்பர் 22 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பாக, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்குத் தொடர்பிருந்தாலும் கூட, சவூதியுடனான தொடர்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதியின் துணைத் தூதரகத்தில் வைத்து, கஷோக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பாக, சர்வதேச மட்டத்திலான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கு மாற்றான நிலைப்பாடொன்றையே, ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்துள்ளார்.
இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு நேரத்தில், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் பாணியிலான வாக்கிய அமைப்பைக் கொண்டிருந்தது.
ஜனாதிபதியின் பாணியில், அதிக வியப்புக் குறிகளை உள்ளடக்கிய இவ்வறிக்கை, “அமெரிக்காவுக்கு முன்னுரிமை!” என்ற இரண்டு சொற்களோடு ஆரம்பித்து, அதன் பின்னர், “இந்த உலகம், மிகவும் ஆபத்தான இடம்!” என, அதற்கடுத்துக் காணப்பட்டது.
அதன் பின்னராக, சவூதியுடனான ஐ.அமெரிக்காவின் உறவை நியாயப்படுத்துவதற்கு, ஈரான் மீதான விமர்சனங்களை, ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்தார். யேமனில் வைத்து, சவூதி அரேபியாவுக்கெதிரான மறைமுகப் போரை, ஈரான் மேற்கொண்டு வருகிறது எனவும், ஈராக்கின் ஜனநாயகத்தை ஸ்திரமற்றதாக மாற்ற முனைகிறது எனவும், அவர் குற்றஞ்சாட்டினார். அத்தோடு, “அமெரிக்காவுக்கு மரணம்!”, “இஸ்ரேலுக்கு மரணம்!” என, ஈரான் பகிரங்கமாகவே சத்தமிடுகிறது எனவும் தெரிவித்து, ஈரானை முழுமையாக விமர்சித்தார்.
அதற்குப் பின்னர், ஈரானுக்கு மறுமுனையில், சிறந்த நாடாக சவூதி இருக்கிறது என, பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்ட அவர், அதைத் தொடர்ந்து, சவூதிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளைச் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்குமிடையிலான சுமார் 450 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர் மதிப்பிலான வர்த்தகத்தில், 110 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர், ஐ.அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் என்ற நிலையில், அவ்வொப்பந்தத்தை “முட்டாள்தனமாக” இரத்துச் செய்தால், ரஷ்யாவும் சீனாவும் அப்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்தார்.
கஷோக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பாக அவர், “ஜமால் கஷோக்ஜிக்கு எதிரான குற்றம், மோசமான ஒன்று. அதை எமது நாடு ஏற்றுக்கொள்ளாது” என்று தெரிவித்ததோடு, அது சம்பந்தமாக, 17 பேருக்கு எதிராக, தம்மால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர், இக்கொலையில், முடிக்குரிய இளவரசர் சல்மானுக்குத் தொடர்புள்ளது என்ற விடயத்தைப் பற்றிக் கதைக்க முற்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப், “தேசத்தின் எதிரி” எனவும் “முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின்” உறுப்பினர் எனவும், சவூதியால் (ஆதாரங்கள் எவையுமின்றி) கஷோக்ஜி அழைக்கப்பட்டவர் என ஞாபகப்படுத்தினார். அதன் பின்னர், “ஆனால் எனது முடிவு, இதன் அடிப்படையில் இல்லை” எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, இக்கொலையில் தனக்குத் தொடர்பில்லை என, முடிக்குரிய இளவரசர் தொடர்ந்து மறுத்து வருகிறார் எனத் தெரிவித்த அவர், “எமது புலனாய்வு முகவராண்மைகள், காணப்படும் எல்லாத் தகவல்களையும் ஆராய்ந்து வருகின்றன. ஆனால், துயரமான இந்நிகழ்வு தொடர்பில், முடிக்குரிய இளவரசர் அறிந்திருக்கலாம் - சில வேளை அவர் அறிந்திருக்கலாம், சிலவேளை அவர் அறியாமலிருக்கலாம்!” என்று, குறிப்பிட்டார்.
இக்கொலையில், முடிக்குரிய இளவரசர் சம்பந்தப்பட்டார் என்பதே, ஐ.அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவராண்மை (சி.ஐ.ஏ) எடுத்துள்ள முடிவு என, ஐ.அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்ற நிலையில், தனது புலனாய்வுக் குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளவே, ஜனாதிபதி இதன்போது தயங்கியிருந்தார்.
“எமது நாட்டினதும் இஸ்ரேலினதும் பிராந்தியத்திலுள்ள ஏனைய பங்காளர்களினதும் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக, சவூதி அரேபியாவின் உறுதியான பங்காளராக இருப்பதற்கு, ஐ.அமெரிக்கா எதிர்பார்க்கிறது” என, அவர் தெரிவித்து, இவ்விடயத்தில், தனது நிலைப்பாடு மாறாது என்பதை வெளிப்படையாகவே, உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த முடிவு, ஐ.அமெரிக்காவுக்குள் மாத்திரமன்றி, சர்வதேச மட்டத்திலும், பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
55 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago