2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கேரளாவில் மழை தொடர்கிறது; இன்று மட்டும் 20 பேர் பலி

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக, அம்மாநிலம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், இன்று (16) மாத்திரம், குறைந்தது 20 பேர், மழை சம்பந்தப்பட்ட விடயங்களால் பலியாகினர் என, அம்மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த 2 வாரகாலமாகப் பெய்துவரும் கடும் மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஆகியவற்றால், இதுவரை 78 பேர் பலியாகியுள்ளனர். அவர்களுள், நேற்றுப் பலியான 20 பேர் தவிர, நேற்று (15) பலியான 35 பேரும் உள்ளடங்குகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மழை காரணமாக மூடப்பட்டுள்ள, கேரளாவின் முக்கியமான விமான நிலையமான கொச்சி விமான நிலையம், நாளை மறுதினம் (18) சனிக்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, விமான நிலையத்தின் ஓடுபாதையும் தரித்து நிற்கும் பகுதியும், வெள்ளத்தில் சிக்கியுள்ளது என அறிவிக்கப்படுகிறது.

அதேபோல், தமது மாநிலத்துக்கான அவசர உதவிகளை வழங்குமாறு, மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியிடமும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் கோரியுள்ளார். மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, அதிக படையினரைக் கோரியுள்ள அவர், மாநில மீட்புப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் கோரியுள்ளார். கடந்த 2 நாள்களில், மத்திய அரசாங்கத்திடம் அவர் உதவி கோரியுள்ள 2ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, பெய்துவரும் கடுமையான மழை, இவ்வார நடுப்பகுதியுடன் நிறைவுக்கு வருமென முன்னர் எதிர்வுகூறப்பட்டிருந்தாலும், நாளை வரை மழை தொடருமென, தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X