2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

‘கோழைத்தனமான’ தாக்குதலில் ஜனாதிபதிக்கு பாதிப்பில்லை

Editorial   / 2018 ஜூன் 25 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கூட்டமொன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில், சிம்பாப்வே ஜனாதிபதி எமர்ஸன் மனங்கக்வா, பாதிப்புகளின்றித் தப்பினார். இக்குண்டுவெடிப்பை, “கோழைத்தனமான நடவடிக்கை” என வர்ணித்த ஜனாதிபதி, இடம்பெறவுள்ள தேர்தலை, இது பாதிக்காது எனவும் குறிப்பிட்டார்.

சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக, சுமார் 3 தசாப்தகாலமாகப் பதவி வகித்த றொபேர்ட் முகாபே, அப்பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் இடம்பெறவுள்ள முதலாவது தேர்தல் இதுவென்ற நிலையில், ஜனாதிபதியை இலக்குவைத்து நேற்று முன்தினம் (23) மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், அதிக கவனத்தை ஈர்த்திருந்தது.

இவ்வெடிப்பு, தனக்கு மிக அருகிலேயே இடம்பெற்ற போதிலும், தான் பாதிக்கப்படவில்லை என, ஜனாதிபதி குறிப்பிட்டார். “என்னிலிருந்து சில அங்குலங்கள் அருகிலேயே அது வெடித்தது. ஆனால், [இறப்பதற்கு] எனக்கான நேரம் இதுவல்ல” என, ஜனாதிபதி தெரிவித்தார்.

புலவாயோவில் இடம்பெற்ற இப்பேரணியில் இடம்பெற்ற இவ்வெடிப்புக்கான காரணங்களை, அதிகாரிகள் இன்னமும் வழங்கவில்லை. ஆனால், தேசியமட்டத் தேர்தல்களில், 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஜனாதிபதியின் கட்சிக்கு வெற்றி கிடைக்காத நகராக புலவாயோ உள்ள நிலையில், இது தொடர்பான கவனம் அதிகரித்துள்ளது.

இவ்வெடிப்பில், 42 பேர் காயமடைந்தனர் என, உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களில், உப ஜனாதிபதி கெம்போ மொஹடி, அவரின் மனைவி கொன்ஸ்டன்டினோ சிவெங்கா, சுற்றுச்சூழல் அமைச்சர், நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் உள்ளிட்டோர் உள்ளடங்குகின்றனர் என, ஜனாதிபதி தெரிவித்தார்.

முகாபேயின் நெருங்கிய அதிகாரியாக இருந்து, பின்னர் அவருடன் முரண்பட்டுக் கொண்டதால், மனங்கக்வாவை, உப ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக்கியமையே, முகாபேயின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X