Editorial / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி, சவூதி அரேபியாவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், சவூதி மீதான விமர்சனங்கள், தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. ஆனால் இப்பிரச்சினையில், சவூதியின் பக்கம் சாய்வதற்குத் தயாராக இருப்பதாக, ஐக்கிய அமெரிக்கா மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் ஜமால், துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதித் தூதரகத்துக்குள் சென்ற பின்னர், இதுவரை வெளியே வராத நிலையில், அவரது நிலை தொடர்பான கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் கொல்லப்பட்டு விட்டார் என, பல தரப்புகள் ஏற்கெனவே கூறிவந்தன.
இந்நிலையில், சவூதிக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்துகளை, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தார். அத்தோடு, இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவை, சவூதிக்கு அனுப்பி, இது தொடர்பில் கலந்துரையாடல் நடத்துமாறும் அவர் பணித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சவூதிக்கு விஜயம் மேற்கொண்ட மைக் பொம்பயோ, அந்நாட்டின் மன்னர் சல்மானைச் சந்தித்து, இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், இவ்விடயம் தொடர்பாக அதிக சர்ச்சையில் சிக்கியுள்ள முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரையும், அவர் சந்தித்தார்.
சந்திப்புகளின் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், ஜமால் காணாமற்போனமை தொடர்பில், முழுமையான விசாரணையொன்றை நடத்த வேண்டுமென, ஒவ்வொரு சந்திப்பிலும் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.
“அதைச் செய்வதற்கான அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். முற்றிலுமானதும் முழுமையானதும் வெளிப்படையானதுமான விசாரணையாக அது அமையுமென அவர்கள் தெரிவித்தனர்” என்று அவர் தெரிவித்தார். அத்தோடு, அவ்விசாரணைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும், முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் அவர்கள் சம்மதித்னர் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும், “ஜமால் உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பில் அவர்களால் ஏதும் சொல்லப்பட்டதா?” என்று கேட்கப்பட்ட போது, “அது தொடர்பான எந்தவித விடயங்கள் குறித்தும் அவர்கள் உரையாடியிருக்கவில்லை” என்று குறிப்பிட்ட அவர், இவ்விடயத்தில் உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு, சவூதித் தரப்பு உறுதியுடன் இருக்கிறது என்ற தகவலை மாத்திரம், உறுதிபடக்கூறியிருந்தார்.
ட்ரம்ப் மீண்டும் ஆதரவு
இவ்விடயத்தில், சவூதிக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்த நிலையில், தனது டுவிட்டர் பதிவு மூலம், அந்த ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தினார்.
ஜமாலைக் கொல்வதற்கான உத்தரவு, முடிக்குரிய இளவரசரிடமிருந்தே வந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவித்த நிலையில், அவரை நம்புவது போன்று கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அதைப் பற்றி எதுவும் தெரியாது என, அவர் கூறினாரெனக் குறிப்பிட்டார்.
பின்னர், ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், “என்ன நடந்தது என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். நீங்கள் குற்றவாளியாக இனங்காணப்படும் வரை, நீங்கள் நிரபராதி” என்று குறிப்பிட்டார்.
28 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
1 hours ago