Editorial / 2018 நவம்பர் 19 , மு.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டமை, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே இடம்பெற்றது என்ற முடிவை, ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவராண்மை (சி.ஐ.ஏ) எடுத்துள்ளதெனச் செய்திகள் வெளியாகியிருந்தாலும், அவ்விடயத்தில் பொறுமையை வெளிப்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது.
முடிக்குரிய இளவரசர் பின் சல்மானின் கடும் விமர்சகரான கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதியின் துணைத் தூதரகத்துக்குள் வைத்துக் கொல்லப்பட்டிருந்தார். இக்கொலையின் பின்னால், முடிக்குரிய இளவசரசரே உள்ளாரெனக் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், சவூதி அதை மறுத்துவந்தது.
எனினும், இவ்விடயத்தில் விசாரணைகளை மேற்கொண்ட சி.ஐ.ஏ, முடிக்குரிய இளவரசரின் நேரடியான உத்தரவின் பேரிலேயே இக்கொலை மேற்கொள்ளப்பட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளது என, ஐ.அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
முடிக்குரிய இளவரசருக்கும் அவரது சகோதரரும் ஐ.அமெரிக்காவுக்கான சவூதித் தூதுவருமான காலிட் பின் சல்மானுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலொன்று ஒட்டுக்கேட்கப்பட்டது எனவும், அடுத்ததாக, இளவசரசர் காலிட்டுக்கும் கொல்லப்பட்ட கஷோக்ஜிக்கும் இடையிலானது ஒட்டுக்கேட்கப்பட்டது எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது பதிலளித்த ஜனாதிபதி ட்ரம்ப், இக்கொலை தொடர்பான இறுதி முடிவை, இவ்வாரம் எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
வழக்கத்தைப் போன்று, சவூதி அரேபியாயுடனான வர்த்தகத் தொடர்புகளைப் புகழ்ந்த ஜனாதிபதி ட்ரம்ப், “வேலைகள், பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றின் விடயத்தில், உண்மையிலேயே அதிஅற்புதமான தோழமையாக அவர்கள் (சவூதி) இருந்து வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
அதேபோல், “நான் ஜனாதிபதி. பல விடயங்களை நான் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது” என அவர் தெரிவித்தார். இதன் மூலமாக, சவூதியின் முடிக்குரிய இளவரசர் மீதான குற்றச்சாட்டு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டாலும், ஜனாதிபதி ட்ரம்ப் பின்வாங்குவாரென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதா என்ற விடயத்திலும், ரஷ்யா தலையிட்டது என சி.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தெரிவித்த போதிலும், அம்முடிவை ஏற்றுக்கொள்வதற்கு, ஜனாதிபதி ட்ரம்ப் தயங்கிவந்தார் என்பது ஞாபகப்படுத்தத்தக்கது.
22 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
47 minute ago