2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

செனட்டர் மக்கெய்ன் காலமானார்

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த செனட்டரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன் மக்கெய்ன், இலங்கை நேரப்படி இன்று (26) காலை காலமானார். மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது 81ஆவது வயதில் காலமானார்.

மூளைப் புற்றுநோய் தொடர்பான தகவல், கடந்தாண்டிலேயே வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ச்சியான சிகிச்சைகளை அவர் பெற்றுவந்தார். எனினும், சிகிச்சையை இடைநிறுத்தும் முடிவை, கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் எடுத்திருந்தார். அதன் பின்னரே, அவர் காலமானார்.

வியட்நாம் போரில், கடற்படையில் பணியாற்றிய மக்கெய்ன், அங்கு சிறைப்பிடிக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். ஐந்தரை ஆண்டுகளாகச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த அவர், அதன் பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.

4 ஆண்டுகள் ஐ.அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினராகவும், அதன் பின்னர் 1987ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை, செனட்டராகவும் அவர் பதவி வகித்தார். செனட்டராக இருந்த காலத்தில், பல்வேறு செயற்குழுக்களின் தலைவராக இருந்த அவர், மிகவும் மதிக்கப்படும் செனட்டராகவும் பார்க்கப்பட்டார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அக்கட்சியைச் சேர்ந்தவரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது, தேவையான நேரங்களில் விமர்சனங்களை முன்வைப்பவராக இருந்த அவர், ஐ.அமெரிக்க மக்களுக்கான சுகாதாரப் பராமரிப்புச் சேவையை வழங்கும் “ஒபாமா கெயார்” சேவையை இல்லாது செய்வதற்கு ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியினரும் முயன்றபோது, அம்முயற்சியை முறியடித்த, தீர்மானகரமான வாக்கை, மக்கெய்னே அளித்திருந்தார்.

அவரது மறைவு குறித்து, ஜனாதிபதி ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, செனட்டர்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் என, ஏராளமானோர் தமது அஞ்சலிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X