Editorial / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் திங்கட்கிழமை இரவு நின்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில் மீது, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் மற்றுமொரு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு அந்நாட்டு ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் ஜாகர்த்தாவிற்கு கிழக்கே உள்ள பெகாசி திமுர் (Bekasi Timur) நிலையத்திற்கு அருகில் சுமார் 12 மணி நேரமாக முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை காலை நிறைவடைந்தன. நசுங்கிய ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி மீட்டனர்.
"இன்று காலை மீட்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. ரயில் பெட்டிகளுக்குள் இனி எவரும் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்," எனத் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமையின் (Basarnas) தலைவர் முகமது ஷாஃபி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த கோர விபத்திலிருந்து உயிர் தப்பிய 29 வயதான சௌசான் ஷரீஃபா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அந்தத் திகில் தருணத்தை விவரித்தார். கை முறிவு மற்றும் காலில் ஏற்பட்ட ஆழமான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் அவர் கூறுகையில்:
"நான் இறந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஜாகர்த்தாவிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பெகாசி திமுர் நிலையத்தில் ரயில் நின்றது. அனைத்தும் ஒரு நொடிப்பொழுதில் நடந்து முடிந்துவிட்டது."
"ரயிலிலிருந்து இறங்குவதற்கு அனைவரும் தயாராக இருந்தபோது, திடீரென இன்ஜினின் சத்தம் மிக சத்தமாகக் கேட்டது. வெளியேறுவதற்குள் ரயில் மோதியதில் பெட்டிக்குள் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து நசுங்கினர். எனக்கு அடியில் சிக்கியிருந்தவர் என்னவானார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடுவோமோ என்று அஞ்சினேன். நல்லவேளையாக நான் மற்றவர்களுக்கு மேல் இருந்ததால் விரைவாக மீட்கப்பட்டேன்," என்றார்.
அரசுக்குச் சொந்தமான இரயில் போக்குவரத்து நிறுவனமான 'KAI' வெளியிட்டுள்ள தகவலின்படி, விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 84 பேர் காயமடைந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்திற்கான ஆரம்பகட்டக் காரணம் குறித்து KAI செய்தித் தொடர்பாளர் பிரனோடோ விபோவோ கூறுகையில், "ரயில் கடவையில் (Level crossing) டாக்ஸி ஒன்று பயணிகள் ரயிலின் மீது மோதியதால், அந்த ரயில் தண்டவாளத்திலேயே நின்றுள்ளது. அந்தச் சமயத்தில் பின்னால் வந்த ரயில் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது," எனத் தெரிவித்தார்.
34 minute ago
35 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
35 minute ago
40 minute ago