2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Editorial   / 2018 ஜூன் 25 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சான்டர்ஸ், உணவகமொன்றுக்கு உணவருந்தச் சென்றிருந்த வேளை, அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அண்மைக்காலத்தில், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முக்கிய அதிகாரிகள், இவ்வாறு எதிர்ப்பைச் சந்திப்பது அதிகரித்து வருகிறது.

கென்டக்கி பிராந்தியத்திலுள்ள “றெட் ஹென்” என்ற உணவகமொன்றுக்கு, சாரா சான்டர்ஸும் அவரது கணவரும் மேலும் சிலரும், நேற்று முன்தினம் (23) உணவருந்தச் சென்றுள்ளனர்.

அப்போது, அவர்களுக்கான உணவு தயாரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், அதன் பின்னர் உணவகத்தின் சமையலறைக்குச் சென்றுள்ள அதன் உரிமையாளர், ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அவ்வுணவகத்தின் ஊழியர்கள் சிலர், சமபாலுறவாளர்கள் எனத் தெரிவிக்கும் உணவக உரிமையாளர், ஐ.அமெரிக்க இராணுவத்தில் திருநம்பிகளையும் திருநங்கைகளையும் தடைசெய்வதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்த முடிவை, சாரா சான்டர்ஸ் நியாயப்படுத்தியமையையும், அண்மையில் சிறு பிள்ளைகளைக் குடும்பங்களிலிருந்து பிரிக்கும் முடிவு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலிருந்து சாரா நழுவியமையையும் சுட்டிக்காட்டி, என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டுள்ளார். அவரை, உணவகத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமா எனக் கேட்டபோது, அவ்வூழியர்கள் “ஆம்” எனப் பதிலளித்துள்ளனர்.

 

அதையடுத்து அங்கு சென்ற உரிமையாளர், சாரா சான்டர்ஸை அழைத்து, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளார். அதன் பின்னர், சாரா சான்டர்ஸ் வெளியேற, அவரோடு வந்தவர்களும் வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பான தகவலை, அந்நிறுவன ஊழியர் ஒருவர் முதலில் வெளியிட, சாரா சான்டர்ஸ், அதை உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை, மெக்ஸிக்க உணவகமொன்றுக்கு உணவருந்தச் சென்றிருந்த உள்விவகாரப் பாதுகாப்புச் செயலாளர் கேர்ஸ்ட்ஜென் நீல்சன், அங்கு உணவருந்தச் சென்றிருந்தவர்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிருந்தார்.

உள்விவகாரப் பாதுகாப்புச் செயலாளராக, ஐ.அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளைப் பிரிக்கும் செயற்பாட்டை வழிநடத்தும் அதிகாரியாக நீல்சன் செயற்படுகிறார் என்பதே, அவர்களின் எதிர்பார்ப்புக்குக் காரணமாக அமைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X