Editorial / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பை, முடிந்தளவு விரைவாக நடத்துவதற்கு, வடகொரியத் தலைவர் கிம் சம்மதித்துள்ளார் என, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.
வடகொரியத் தலைவரை நேற்று முன்தினம் (07) சந்தித்த ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, வடகொரியாவில் மதிய உணவை முடித்துக்கொண்டு, அங்கிருந்து தென்கொரியத் தலைநகர் சியோலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னை அவர் சந்தித்தமை தொடர்பாக, அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி அலுவலகம், “ஐ.அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பை, முடிந்தளவு விரைவான திகதியில் நடத்துவதற்கு, வடகொரியத் தலைவர் கிம்முடன், தான் கருத்தொற்றுமை கொண்டிருந்தார் என, இராஜாங்கச் செயலாளர் பொம்பயோ தெரிவித்தார்” என்று குறிப்பிட்டது.
ஆனால், எப்போது என்பதற்கான உறுதியான திகதியோ அல்லது எங்கே நடத்துவது என்பது தொடர்பான முடிவோ எடுக்கப்படவில்லை என, மேலும் அறிவிக்கப்படுகிறது.
ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம்மும், ஏற்கெனவே இவ்வாண்டு ஜூனில், சிங்கப்பூரில் வைத்துச் சந்தித்திருந்தனர். இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக்கொண்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்ததோடு, உலக அரங்கில், அதிக கவனத்தை ஈர்க்கும் ஒரு விடயமாகவும் இது மாறியிருந்தது.
அதைத் தொடர்ந்து, இரண்டாவது தடவையாகச் சந்திப்பது தொடர்பாக, வடகொரியத் தலைவர் கிம், கடிதமொன்றை, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அனுப்பிவைத்திருந்தார். இதனால், இரண்டாவது சந்திப்பு இடம்பெறுமென்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தன.
ஆனால், சில நாள்களுக்கு முன்னர் ஐ.அமெரிக்காவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றியிருந்த வடகொரிய வெளிநாட்டு அமைச்சர், தங்களது நாடு மீதான தடைகள் அமுலில் இருக்கும் வரை, அணுவாயுதமழிப்புத் தொடர்பில் வாய்ப்புகளே இல்லை எனக் குறிப்பிட்டதோடு, ஐ.அமெரிக்காவின் தடைகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். எனவே, சந்திப்பு இடம்பெறுமா என்ற சந்தேகங்கள் எழுந்திருந்தன.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago