2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் வெற்றி

Editorial   / 2024 மே 21 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அரசில் அங்கம் வகித்து வந்த ஜனதா சமாஜ்வாதி கட்சி (ஜேஎஸ்பி) தனது ஆதரவை கடந்த வாரம் திரும்ப பெற்றது. மேலும், கூட்டுறவு சங்கங்களின் நிதியில் முறைகேடு செய்ததாக அந்நாட்டு உள்துறை மந்திரி ரபி லாமிச்சானே மீது எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் குற்றஞ்சாட்டி, பாராளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி தனது ஆதரவை விலக்கி கொண்டால் 30 நாட்களில் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி அதில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், பாராளுமன்றத்தில் பிரசந்தா அரசு மீது   நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி, நேபாள பாராளுமன்றத்தில்  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் 158 உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.

இதனை தொடர்ந்து 157 வாக்குகள் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா வெற்றி பெற்றார். பிரசந்தா பிரதமராக பதவியேற்ற 18 மாதங்களில் பாராளுமன்றத்தில் நடத்தப்படும் நான்காவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி 3வது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பிரசந்தா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X