2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘நாசகார நடவடிக்கைகளுக்கு கப்பல்கள் உள்ளாகின’

Editorial   / 2019 மே 14 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தில் நேற்று முன்தினம் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக லெபனானிய, ஈரானிய ஊடகங்களில் வெளியாகிய பிழையான அறிக்கைகளைத் தொடர்ந்து, நாசகார நடவடிக்கைகளுக்கு, நான்கு வர்த்தகக் கப்பல்கள் உள்ளாகியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எவ்வாறான நாசகார நடவடிக்கை எனவோ அல்லது யார் இதற்கு பொறுப்பானவர்கள் எனக் கூறவோ ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச டபிள்யூ.ஏ.எம் செய்தி முகவரகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு கடற்கரையோரத்துக்கு அப்பால், வேறுபட்ட நாடுகளைச் நான்கு வர்த்தகக் கப்பல்கள் நாசகார நடவடிக்கைகளுக்கு நேற்று முன்தினம் காலையில் இலக்கானதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஓமான் வளைகுடாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்பரப்புக்கு அருகில், ஃபுஜைரா துறைமுகத்துக்கு கிழக்காக குறித்த கப்பல்கள் நின்றதாக குறித்த அறிக்கை கூறுகின்றது.

இதுதவிர, குறித்த சம்பவத்தை உள்ளூர், சர்வதேச அதிகார சபைகளின் ஒத்துழைப்புடன் விசாரிப்பதாகவும், கப்பல்களில் எவரும் காயமடையோ அல்லது உயிரிழக்கவோ இல்லையென்றும், பாதிப்பான இரசாயனங்கள் அல்லது எரிபொருள் வெளியாகவில்லை எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபிய எண்ணெய்த் தாங்கிகள் இரண்டு, ஃபுஜைரா கடற்கரைக்கு அப்பால் நாசகார தாக்குதலொன்றில் நேற்று முன்தினம் இலக்கு வைக்கப்பட்டதாக நேற்று (13) தெரிவித்த சவூதி அரேபியாவின் சக்தி அமைச்சர் காலிட் அல்-ஃபாலிஹ், குறிப்பிடத்தக்களவு பாதிப்பைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சவூதி அரேபியாவின் அரச எண்ணெய் நிறுவனமான சவூதி அரம்கோவின் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கவிருந்த றஸ் தனுரா துறைமுகத்திலிருந்து சவூதி அரேபியாவின் மசகெண்ணையை குறித்த இரண்டு கப்பல்களில் ஒன்று கொண்டிருந்ததாக அறிக்கையொன்றில் காலிட் அல்-ஃபாலிஹ் தெரிவித்ததாக சவூதி அரேபிய அரச செய்தி முகவரகமான எஸ்.பி.ஏ கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X