2025 மே 15, வியாழக்கிழமை

பாகிஸ்தான் குண்டுவீச்சில் 11 வயது இரட்டையர்கள் உயிரிழப்பு

Editorial   / 2025 மே 15 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஜம்முவைச் சேர்ந்த 11 வயதான இரட்டையர்கள் உயிரிழந்தனர். பிறக்கும்போது இரட்டையர்களாக பிறந்த இவர்கள், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ரமீஸ். இவரது மனைவி உர்ஷா. இவர்களுக்கு உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இவர்கள் இருவரும் 5 நிமிட இடைவெளியில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் திகதி பிறந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பாத்திமா, ஜைன் அலியும் இறந்தனர்.

இதுகுறித்து இருவரின் தாய்மாமாவான ஆதில் பதான் கூறும்போது, “பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை கிராமங்களில் இருந்த 27 பேர் உயிரிழந்தனர். அதில் உர்பா பாத்திமாவும், ஜைன் அலியும் அடங்குவர். கடந்த 7-ம் திகதி தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசித் தாக்கியது.

இரட்டையர்களாகப் பிறந்து இணை பிரியாமல் வசித்து வந்த இருவரும், குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரு நிமிட இடைவெளியில் உயிரிழந்து விட்டனர். இந்தத் தாக்குதலில் இவர்களின் தந்தை ரமீஸும் காயமடைந்தார்.

அவர் பூஞ்ச் மாவட்டம் மண்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் குண்டுவீச்சுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 2 மாதங்களுக்கு முன்புதான் பூஞ்ச் மாவட்டத்துக்கு பாத்திமாவும், ஜைன் அலியும் படிப்பதற்காக சென்றனர். கடந்த மாதம் 25-ம் திகதி பிறந்தநாளை கொண்டாடிய 12 நாட்களிலேயே அவர்கள் இறந்துவிட்டனர்.

தாக்குதல் நடப்பதை அறிந்த நான் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஆனால் அவர்களுக்கு அருகிலேயே குண்டுவெடித்து அவர்களை பலிகொண்டு விட்டது. உர்பா பாத்திமா, ஜைன் அலி, ரமீ்ஸ் ஆகியோரை ஜீப்பில் மருத்துவமனைக்கு நான்தான் அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கு செல்வதற்கு இருவரும் உயிரிழந்தனர்.

2 குழந்தைகளும் உயிரிழந்தது அவர்களது தந்தை ரமீஸுக்கு இதுவரை தெரியாது. அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகளின் தாய் உர்ஷா, மருத்துவமனையில் அவரை கவனித்து வருகிறார்" என்றார்.

பிறக்கும்போதே இரட்டையர்களாக பிறந்த உர்பா பாத்திமா, ஜைன் அலி ஆகியோர், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .