2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

படுகொலைகளை வெளிப்படுத்திய இரு ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக அறிக்கையிடுவதில் ஈடுபட்டிருந்த இரண்டு ஊடகவியலாளர்கள், நாட்டின் அரச இரகசியங்கள் தொடர்பான சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஏழு ஆண்டுகளுக்குச் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான வழக்கு, தொடர்ந்து இடம்பெற்றுவந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு, நேற்று (03) வழங்கப்பட்டது.

இராணுவ ஆட்சியின் கீழ் அண்மைக்காலம் வரை காணப்பட்ட மியான்மார், ஜனநாயகப் பண்புகளுக்குத் திரும்பிவருகிறது என்று கூறப்பட்ட நிலையில், அதைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலேயே, இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது என, சர்வதேச மனித உரிமை அமைப்புகள், இவ்வழக்கை விமர்சித்தன.

றொய்ட்டேர்ஸ் செய்தி முகவரகத்துக்காகப் பணியாற்றிய, வா லோன், கியாவ் சோ ஓ இருவரும், அரச இரகசியச் சட்டத்தை மீறினர் என்று அறிவித்த யாங்கோன் வடக்கு மாவட்ட நீதிபதி யே லூவின், இத்தண்டனையை அறிவித்தார். கடந்தாண்டு டிசெம்பர் 12ஆம் திகதியிலிருந்து அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அக்காலமும் தண்டனைக் காலத்துக்குள் சேர்க்கப்படும் என, நீதிபதி மேலும் அறிவித்தார்.

ராக்கைன் மாநிலத்திலுள்ள இன் டின் என்ற பகுதியில், றோகிஞ்சா முஸ்லிம்கள் 10 பேர் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாகவும், பொலிஸாரும் படையினரும் இணைந்து மேற்கொண்டனர் எனக் கூறப்படும், வேறு குற்றங்கள் தொடர்பாகவும், இவ்விரு ஊடகவியலாளர்களும் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, கடந்தாண்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர். தங்களுடைய செய்திச் சேகரிப்புக்காக, இரகசியத் தகவல்களை, சட்டவிரோதமாகப் பெற்றனர் என்பதே, இவர்கள் மீதான குற்றஞ்சாட்டாக இருந்தது.

இவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த செய்தி, அவர்களின் கைதின் பின்னர் வெளியானது. மறுபக்கமாக, அவர்கள் ஆராய்ந்துவந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய இராணுவம், தம்மில் ஒரு சிலர், அக்கொலைகளைப் புரிந்தனர் என ஏற்றுக்கொண்டிருந்தது. இவற்றுக்கு மத்தியிலேயே விசாரணை இடம்பெற்று வந்தாலும், அவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X