2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு அங்கிகாரம்: தெரேசா மே தப்பினார்

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்துக்கு, ஐ.இராச்சிய அமைச்சவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், பிரதமர் தெரேசா மே மீது காணப்பட்ட கடுமையான அழுத்தங்களுக்கு, இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளது.

பிரெக்சிற் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில், விலகுவதற்கான ஆதரவை மக்கள் வெளிப்படுத்தியிருந்தாலும், விலகுவது தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐ.இராச்சியத்துக்கும் இடையிலான பேரம்பேசல் பேச்சுவார்த்தைகள், பல்வேறு தடங்கல்களைச் சந்தித்திருந்தன. எனினும், இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டு, அந்த பிரெக்சிற் வரைவு ஒப்பந்தம், அமைச்சரவையிடம் நேற்று (14) இரவு சமர்ப்பிக்கப்பட்டது.

பிரெக்சிற் தொடர்பாக, அமைச்சரவைக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், அது தற்போது, அமைச்சரவையால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரெக்சிற் செயலாலர் டொமினிக் றாப், பணி, ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மக்வே, வட அயர்லாந்து பிரதியமைய்ச்சர் ஷைலேஷ் வரா, பிரெக்சிற் பிரதியமைச்சர் சுயெல்லா பிரேவர்மன், நாடாளுமன்ற தனியார் செயலாளர் அன்னே-மரி ட்ரெவலைன் ஆகியோர் தமது பதவிகளிலிருந்து இன்று இராஜினாமா செய்துள்ளனர்.

பிரெக்சிற் நடைமுறைகள், அடுத்தாண்டு மார்ச் மாதத்திலிருந்தே நடைமுறைக்கு வரவுள்ளதுடன், அடுத்த 21 மாதங்களும், இடைமாற்றக் காலமாகக் காணப்படும்.

இதில் முக்கியமான பிரச்சினையாக, அயர்லாந்துக்கும் வட அயர்லாந்துக்கும் இடையிலான எல்லையே காணப்பட்டது. தனி நாடான அயர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமாக உள்ளது. மறுபக்கமாக, ஐ.இராச்சியத்தின் ஓர் அங்கமான வட அயர்லாந்து, அயர்லாந்துடன் எல்லையொன்றைப் பகிர்கிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐ.இராச்சியத்துக்கும் இடையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்று, இடைமாற்றக் காலத்துக்குள் ஏற்படாவிட்டால், அந்த எல்லையில் என்னவாறான நடைமுறையைப் பின்பற்றுவது என, இரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடு காணப்பட்டது.

ஆனால், அதற்கு இணக்கப்பாடு காணப்பட்டு. முழுமையான ஐ.இராச்சியமும், ஒரே பிராந்தியமாகக் கருதப்படும் எனவும், சுங்க ஏற்பாடுகள், அதன் அடிப்படையிலேயே காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இடைமாற்றக் காலத்தில், தேசியமட்ட நிர்வாகங்களுக்கும் வணிகங்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களே அமுல்படுத்தப்படும். இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியத்திலும் ஒரே சந்தை என்ற ஏற்பாட்டிலும், ஐ.இராச்சியம் தொடர்ந்தும் பங்குபெறும்.

அதேபோல், ஐ.இராச்சியத்தில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த 3 மில்லியனுக்கும் மேற்பட்ட பிரஜைகளும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பிரஜைகளும், தொடர்ந்தும் அதே நாடுகளில் வசிக்க முடியும்.

மேலதிகமாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவாக, 51 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்களை, ஐ.இராச்சியம் வழங்க வேண்டியிருக்க வேண்டுமெனக் கணிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X