2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பிரேஸில் முன்னாள் ஜனாதிபதிக்குப் பதவி: மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை, தனது பணியாற்றொகுதியின் பிரதானியாக ஜனாதிபதி டில்மா றூசெப் நியமித்ததைத் தொடர்ந்து, பிரேஸிலில் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் வெடித்துள்ளன.

பணியாற்றொகுதித் தலைவரென்பவர், பிரேஸிலிலுள்ள உயர்நிலை நிறைவேற்றதிகாரி என்பதோடு ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவியாளருமாவார். அப்பதவியை வகிப்பவர்கள், ஜனாதிபதியின் அமைச்சரவையின் ஓர் அங்கம் ஆவார்.

ஜனாதிபதிக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கெதிராக மக்கள் எதிர்ப்பு அதிகமாகக் காணப்படும் நிலையில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அத்தோடு முன்னாள் ஜனாதிபதி, ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையிலேயே அவருக்குப் பதவியை வழங்கியமையின் மூலம், அவரைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி முயன்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

தற்போது எதிர்ப்பைச் சந்தித்துவரும் ஜனாதிபதியின் நிர்வாகத்துக்கு உதவக்கூடிய திறமையுடைய ஒரே நபரென முன்னாள் ஜனாதிபதியை அரசாங்கத் தரப்புகள் விளித்துள்ள போதிலும், அமைச்சரவை சட்டவிலக்குக் காரணமாக, சாதாரண நீதிமன்றமொன்றில் முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதிக்கெதிராகப் பதவி விலக்கல் முயற்சிகள், பொருளாதாரத் தேக்க நிலை, பாரிய போராட்டங்கள், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளால் நற்பெயரிழப்பு என, பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டுவரும் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள இந்தச் செயற்பாடு, மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

இதற்கெதிராக பிரேசிலியாவிலும் சாவோ போலோவிலும் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்கள், பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அத்தோடு, ஜனாதிபதிக்கெதிரான பதவி விலக்கல் இப்போது இடம்பெற வேண்டுமெனவும் அவர்கள் கோரினர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதிப் பதவியிலிருந்து லுலா விலகும் போது, மிகவும் ஆதரவுடன் காணப்பட்டார். ஆனால், ஜனாதிபதி சிக்கியுள்ள பெற்றோலிய ஊழல் குற்றச்சாட்டில், பணச்சலவைக் குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி சிக்கியுள்ளதன் காரணமாக, தனது ஆதரவை அவர் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .