Editorial / 2018 நவம்பர் 01 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாமியர்களின் இறை தூதரான நபியை அவமானப்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த கிறிஸ்தவப் பெண்ணொருவர், அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தால், நேற்று (31) விடுவிக்கப்பட்டார். இது, பாகிஸ்தானைப் பொறுத்தவரை, வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பாக அமைந்திருந்தது.
ஆசியா பிபி என்று அழைக்கப்படும் ஆசியா நொரீன் என்ற இப்பெண், நபியை அவமானப்படுத்தினார் என, அவரது அயலவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 8 ஆண்டுகளாக அவர், தொடர்ந்தும் தனியான சிறைக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது மேன்முறையீடு, இஸ்லாபாத்திலுள்ள உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், வளாகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
தீர்ப்பை வாசித்த பிரதம நீதியரசர் சாகிப் நிசார், அவரை விடுவிக்கும் உத்தரவை வழங்கினார்.
விடுவிக்கப்பட்டுள்ள ஆசியா, தனது 4 பிள்ளைகளோடு, பாகிஸ்தானை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் அவருக்கான பாதுகாப்புப் போதுமாக இருக்காது என்று கருதப்படுவதோடு, சில நாடுகள், அவருக்குப் பிரஜாவுரிமை வழங்கவும் முன்வந்துள்ளன.
அவர் மீதான குற்றச்சாட்டு
2009ஆம் ஆண்டு ஜூன் மாதம், குவளையொன்றில் நீர் குடித்தமை தொடர்பாக எழுந்த பிரச்சினையில், ஆசியாவுக்கும் இன்னும் சில பெண்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அதன்போது, நபியை அவதூறு செய்யும் வகையில், ஆசியா கருத்துத் தெரிவித்தார் என, அப்பெண்கள் குற்றஞ்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் வைத்து, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின், பொலிஸ் விசாரணையொன்று இடம்பெற்று, அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கருத்து மோதல்கள்
பாகிஸ்தானின் தேசிய மதமாக இஸ்லாம் காணப்படுவதோடு, அந்நாட்டின் சட்டத் துறையில், அம்மதத்தின் தாக்கம் முழுமையாகக் காணப்படுகிறது. மத நிந்தனைச் சட்டத்தை முழுமையாகவும் இறுக்கமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள், மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.
ஆசியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது என, கீழ் நீதிமன்றமொன்றில் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் சல்மான் தஸீர், ஆசியாவுக்கு ஆதரவாக, அத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார்.
ஆனால், பொது வெளியில் வைத்து, அவரது பாதுகாவலராலேயே, அவர் 2011ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற முஸ்தாஸ் குவாட்ரிக்கு, மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், பாகிஸ்தானில் பலராலும், கதாநாயகன் என்றே அவர் போற்றப்படுகிறார்.
இவ்வாறான கருத்துகளைக் கொண்ட பாகிஸ்தானில், ஆசியாவை விடுவிப்பதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பாகக் கருதப்படுகிறது.
28 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
1 hours ago