2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மனைவி, சி.என்.என் ஆகியோரால் ட்ரம்ப்புக்கு அழுத்தங்கள்

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, அவரது மனைவி மெலானியா ட்ரம்ப், சி.என்.என் ஊடகம் ஆகியோரால், கடுமையான அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் பணியாட்தொகுதியின் முக்கிய பணியாளர் ஒருவரைப் பணி நீக்கம் செய்யுமாறு, மெலானியா கோரியுள்ள அதேவேளை, ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, நீதிமன்றத்தின் உதவியை, சி.என்.என் நாடியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்புக்கான பிரதி ஆலோசகர் மிரா றிக்கார்டெல்லைப் பதவி விலக்குமாறு, மெலானியா, பகிரங்கமான கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். ஆபிரிக்காவுக்கான விஜயத்தை மெலானியா மேற்கொண்டிருந்த போது, அது கையாளப்பட்ட விதம் தொடர்பில் திருப்தில்லாமையே, இக்கோரிக்கைக்கான காரணமாக அமைந்துள்ளது.

ஐ.அமெரிக்க வரலாற்றில், முதற்பெண்மணிகள், தங்களது கணவன்மாருக்கான அழுத்தங்களை, உத்தியோகபூர்வ விடயங்களில் வழங்குவது வழக்கமென்ற போதிலும், பகிரங்கமான அறிக்கை மூலமாக, அவ்வாறான அழுத்தங்களை வழங்குவது அரிதாகும்.

எனினும், முதற்பெண்மணி மெலானி சார்பில் விடுவிக்கப்பட்ட அறிவிப்பில், “முதற்பெண்மணியின் அலுவலகத்தின் நிலைப்பாடாக, அவர் (மிரா), வெள்ளை மாளிகையில் பணியாற்றும் கௌரவத்தை இனிமேலும் கொண்டிருக்கவில்லை என்பதாகும்” எனக் குறிப்பிட்டது.

ஆனால், எதற்காக அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளனர் என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆனால், முதற்பெண்மணியின் ஆபிரிக்கச் சுற்றுப் பயணத்தில், அவருக்கு ஒதுக்கப்பட்ட அரச வளங்கள் தொடர்பிலேயே, கருத்து முரண்பாடு ஏற்பட்டதெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மனைவியின் பகிரங்கமான அழுத்தம் இவ்வாறிருக்க, தமது ஊடகவியலாளர் ஒருவர், வெள்ளை மாளிகைகளுக்கு நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, நீதிமன்றத்தின் உதவியை, சி.என்.என் ஊடகம் நாடியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப்புடன், ஊடகச் சந்திப்புகளில் முரண்பட்டுக் கொண்டார் என, அவராலும் வெள்ளை மாளிகையாலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஜிம் ஒகஸ்டா, அண்மையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஜனாதிபதி ட்ரம்ப்பிடம், கடினமான கேள்விகளை எழுப்ப முயன்றதைத் தொடர்ந்து, அவரின் ஊடக அனுமதி இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

அவரது அனுமதியை இரத்துச் செய்த வெள்ளை மாளிகை, திரிபுபடுத்தப்பட்ட காணொளியொன்றை வெளியிட்டு, வெள்ளை மாளிகையின் பயிற்சிப் பணியாளரை, அவ்வூடகவியலாளர் அடிக்கும் வகையில் செயற்பட்டார் எனக் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்நிலையிலேயே, நீதிமன்றத்தில் உதவியை, சி.என்.என். நாடியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X