2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘முகிலன் வழக்கு விசாரணையில் துப்பு’

Editorial   / 2019 ஜூன் 07 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணப்பாளரான முகிலன் வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளதாக, குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் குற்றப் பிரிவின் பொலிஸார் கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முகிலன் காணாமல் போய் நேற்றுடன் 112 நாட்கள் ஆகின்றதாகவும், அவரைக் கண்டுபிடித்துத் தரக் கோரி மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன், சென்னை உயர் நீதிமன்றத்தின் நேற்று ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, ஏற்கெனவே குறித்த வழக்கினர் விசாரணையின்போது முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் குற்றப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நிர்மல் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஸ்டெர்லைட் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட இரண்டு நாள்களுக்குள் முகிலன் காணமல் போய் இருப்பதாகவும், அவரை விரைவில் கண்டுபிடித்து தரவும் கோரினர்.

அந்தவகையில், முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை மூடப்பட்ட உறையில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் குற்றப் பிரிவினர் தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முகிலன் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸாருக்கு இது குறித்து துப்பு கிடைத்துள்ளதாகவும் அதை வெளியில் கூறினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும், அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முகிலன், இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. பொலிஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு பிறகு அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்றார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X