2025 நவம்பர் 05, புதன்கிழமை

முடிவுக்காகக் காத்திருக்கும் ரஜினி

Editorial   / 2019 ஏப்ரல் 30 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் நடிகர் ரஜினிகாந்த், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், இவரது அரசியல் பயணம் குறித்தான அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலில் குதிக்காமலேயே, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் பரபரப்பாகப் பேசப்பட்டு வருபவர். ரஜினியின் 1996ஆம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’ பட வெற்றி விழாவின்போதான பேச்சுகள், அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கத்துக்கு எதிராக அவர் கொடுத்த குரல், இப்போதுவரை பேசப்பட்டு வருவதோடு, அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க, த.மா.கா கூட்டணிக்கு அவர் அளித்த ஆதரவே, அவர்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

அந்தத் தேர்தலின்போதே, ரஜினிகாந்தை அரசியலுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும். அது பலனளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை, ரஜினிகாந்த் வெளியிட்டார். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று ரசிகர்கள் முன்னிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி, உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தினார். மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமித்து கட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ரஜினி பின்வாங்கினார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே வெளியிட்டு விட்டு தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பேட்டியளித்த ரஜினி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 23ஆம் திகதி, நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி தனது எண்ணத்தை விரிவாக வெளிப்படுத்தவுள்ளார் என்றும் இதன் பின்னர், அதிரடி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X