2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் பிரதமருக்கு பொது மன்னிப்பு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதமராக, 2001 முதல் 2006 வரை பதவி வகித்தவர் தக்சின் ஷினவத்ரா. தொலைதொடர்புத்துறை நிறுவன உரிமையாளர்; பெரும் செல்வந்தர்.

இவரது பதவிக்காலத்தில், ஊழல் செய்ததாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இராணுவப்புரட்சி நடந்து, தக்சின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

அவரது கட்சி தடை செய்யப்பட்டு, தக்சின் அரசியலில் ஈடுபடவும் அந்நாட்டு அரசு தடை விதித்த நிலையில், கைது அச்சத்தில், வெளிநாட்டுக்கு தப்பியோடிய அவர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் 15 ஆண்டுகள் தங்கியிருந்தார்.

வெளிநாட்டில் இருந்தாலும், தாய்லாந்து அரசியலில் தக்சினின் கையே ஓங்கி இருந்தது. 2011இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில், அவரது இளைய சகோதரி இங்லக் ஷினவத்ரா பிரதமர் ஆனார். இருந்தபோதும், தக்சின் வெளிநாடுகளிலேயே தங்கி இருந்தார். கால மாற்றத்தில் அவருக்கு மீண்டும் தாய்நாடு வரும் வாய்ப்பு உருவானது.

2023ஆம் ஆண்டு தேர்தலில், அவரது தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வரும் சூழல் உருவான நிலையில், தக்சின் நாடு திரும்பினார். வந்தவுடன் அவர் மீதான பழைய வழக்குகளில் விதிக்கப்பட்டிருந்த 8 ஆண்டு சிறை தண்டனைக்காக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிறை சென்ற சில நாட்களிலேயே உடல் நலமில்லை என்று கூறி மருத்துவமனைக்கு வந்து விட்டார். அங்கேயே தொடர்ந்து இருந்த நிலையில், அவரது தண்டனை ஓராண்டாக மன்னரால் குறைக்கப்பட்டது.

இதற்கிடையே, விதிமுறைகளை மீறியதாக கூறி, அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம், தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவி நீக்கம் செய்தது. புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தக்சினிடம் வந்தவுடன், தன் இளைய மகளை பதவிக்கு கொண்டு வர முடிவு செய்தார். அதன்படி அவரது இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தான், முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அரசு மன்னிப்பு கிடைத்துள்ளது என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக ஊழல் வழக்குகளுக்காக விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தக்சின் ஷினவத்ரா விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.S

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .