Editorial / 2018 ஜூன் 18 , மு.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலிபான் ஆயுதக்குழுவுடன் அறிவித்திருந்த மோதல் தவிர்ப்பை, தொடர்ந்தும் நீடிப்பதாக, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி அறிவித்துள்ளார். இந்த மோதல் தவிர்ப்புக் காலத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் நேற்று முன்தினம் (16) நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டமைக்கு மத்தியிலும், இந்த அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஜனாதிபதி கானி, தமது பாதுகாப்புப் படைகளை, தடுப்பு நிலையிலேயே இருக்குமாறு கோரினார். அத்தோடு, மோதல் தவிர்ப்பு நீடிப்புத் தொடர்பான ஏனைய விடயங்களை, விரைவில் வெளியிடுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
முஸ்லிம்களின் ஈகைத் திருநாளை முன்னிட்டு, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு, நாளையுடன் (19) நிறைவடையவுள்ள நிலையிலேயே, இவ்வறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி கானி, தலிபான்களையும், தமது மோதல் தவிர்ப்பை நீட்டிக்குமாறு கோரினார். தலிபான்களின் மோதல் தவிர்ப்பு, நேற்று (17) மாலையுடன் முடிவடையவிருந்தது.
ஈகைத் திருநாளை முன்னிட்டு, அரசாங்கத்தால் ஒரு வாரத்துக்கும், தலிபான்களால் 3 நாட்களுக்கும் முன்னெடுக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு, பெருமளவுக்கு அமைதியையே ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், இந்த மோதல் தவிர்ப்பைக் கொண்டாடுவதற்காக, தலிபான் ஆயுததாரிகளோடு இணைந்து, ஆப்கான் இராணுவத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்கு குண்டுவெடித்தமை, இக்கொண்டாட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதில், 26 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 54 பேர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலைத் தாமே நடத்தியதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியிருந்தது.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு, தலிபான்களுடன் மாத்திரமே என்பதோடு, இம்மோதல் தவிர்ப்பில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு இணைந்து கொண்டிருக்கவில்லை. ஆனால், தலிபான்களும் அரச படைகளும் ஒன்றாக இருந்த இடத்தில் அக்குழு நடத்திய தாக்குதல், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத் தொடர்பான புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025