Editorial / 2018 நவம்பர் 16 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா மீது, அழுத்தத்துடன் கூடிய செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருவதாக நேற்று (15) தெரிவித்த ஐக்கிய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ், அதேவாறான செயற்பாட்டை, ஏனைய தோழமை நாடுகளும் முன்னெடுக்க வேண்டுமெனக் கோரினார்.
தென்கிழக்காசிய நாடுகளின் சங்க (ஆசியான்) மாநாடு, சிங்கப்பூரில் நேற்று ஆரம்பித்த போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மைக் பென்ஸ் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், சிங்கப்பூரில் வைத்து இவ்வாண்டு சந்தித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேம்பட்டதெனக் கருதப்பட்டது. ஆனால், அதே சிங்கப்பூரில் வைத்து, வடகொரியா மீதான அழுத்தத்தைத் தொடர்ந்து பேணுமாறு, உப ஜனாதிபதி பென்ஸ் கோரியுள்ளார்.
தென்கிழக்காசியப் பிராந்தியத்துடனான தமது உறவில், வடகொரியாவுக்கெதிரான அழுத்தங்களை வழங்குவது உள்ளடங்குகிறது என, பென்ஸ் தெரிவித்தார். அத்தோடு, அவ்வாறான அழுத்தத்தைத் தொடர்ந்து பேணுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகள், வடகொரியத் தரப்பிலிருந்து எழுந்துவருகின்றன. அந்நாட்டுடன் நேரடியாக முரண்பாட்டில் உள்ள தென்கொரியா கூட, வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்துதற்கான சம்மதத்தை வெளிப்படுத்தியுள்ளது.
என்றாலும், அணுவாயுதமழிப்பை வடகொரியா மேற்கொண்டாலொழிய, தடைகள் நீக்கப்படக்கூடாது என, ஐ.அமெரிக்கா கருதுகிறது. இம்மாநாட்டில், வடகொரியாவின் நெருக்கமான வல்லரசு நாடுகள் என்று கருதப்படும் ரஷ்யா, சீனா ஆகியவற்றின் சார்பில் முறையே ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரதமர் லீ கெஜியாங் ஆகியோரும் பங்குபற்றினர். எனவே, இதன்போது, வடகொரியா தொடர்பான அழுத்தங்களைத் தொடர வேண்டுமென உப ஜனாதிபதி பென்ஸ் தெரிவித்தமை, இவ்விடயத்தில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் அழுத்தம் வழங்கும் நோக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
42 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
1 hours ago