Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டி இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினரான பொன். கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ஆம் திகதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியிருந்தது.
இத்தேர்தலில், அனைதிந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. தி.மு.க கூட்டணியை பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.கவும், நாங்குநேரி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புவோர் தங்கள் கட்சி தலைமையகத்தில் விருப்பமனுக்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சியை நாடாளுமன்ற கீழவையில் பிரதிநிதித்துவப்படுத்துபவருமான பொன். கவுதம சிகாமணி, தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த விருப்ப மனுவை அளித்துள்ளார்.
எனவே, உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளரை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ளார்.
இதேபோல் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் விருப்ப மனு பெற்றுள்ளார். எனவே, காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனப் பேசப்படுகிறது.
18 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
04 Nov 2025