Editorial / 2018 ஜூலை 10 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு ஊடகவியலாளர்கள் மீது, இரகசிய அரச ஆவணங்களைப் பெறுதல் தொடர்பான சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவுசெய்ய, மியான்மார் நீதிமன்றமொன்று, நேற்று (09) அனுமதித்தது. அதைத் தொடர்ந்து, 14 ஆண்டுகள் வரை சிறையில் வாட வேண்டிய ஆபத்தை, அவ்வூடகவியலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
றொய்ட்டேர்ஸ் சர்வதேச செய்தி ஊடகத்தின் செய்தியாளர்களான வா லோன், கியாவ் சோ ஊ ஆகியோரே, கொலனித்துவக் காலச் சட்டமான, “உத்தியோகபூர்வ இரகசியச் சட்டம்” என்ற சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ளனர். யங்கோன் மாவட்ட நீதிபதி யே லுவின், இதற்கான அங்கிகாரத்தை வழங்கினார்.
இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணைகள், கடந்த 6 மாதங்களாக இடம்பெற்று வந்ததுடன், சர்வதேச கவனத்தையும் ஈர்த்திருந்தன.
றோகிஞ்சா மக்களுக்கெதிராக, ராக்கைனில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான கவனம், சர்வதேச அளவில் காணப்படும் நிலையில், அது தொடர்பாகச் செய்தி சேகரித்தவர்களைக் கைதுசெய்வது, ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வந்தன.
இவ்விடயத்தில், மியான்மார் அரசாங்கத்தின் தலைவி ஆங் சான் சூ கி தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிடப் போவதில்லை என, அரசாங்கம் அறிவித்திருந்தது.
கைதுசெய்யப்படும் போது இவ்விரு ஊடகவியலாளர்களும், கிராமமொன்றில் வைத்து, 10 றோகிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் செய்தி சேகரித்து வந்தனர். அவர்கள் கைதான பின்னர், இது தொடர்பான செய்தி வெளியானதுடன், அவர்கள் செய்தி சேகரித்த விடயம் உண்மையானது என்பதோடு, அவ்வாறு 10 பேரைப் படுகொலை செய்தோருக்கு, ஏற்கெனவே தண்டனை வழங்கப்பட்டு விட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago