Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில், விவசாயிகளுக்கும் மந்தைப் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்களால், 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 3,600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, சர்வதேச மன்னிப்புச் சபை, நேற்று (17) தெரிவித்தது. அத்தோடு, இவ்வாறு கொல்லப்பட்டோரில் அதிகமானோர், இவ்வாண்டிலேயே கொல்லப்பட்டனர் எனவும் அவ்வமைப்புத் தெரிவித்தது.
நைஜீரியாவின் ஜனாதிபதித் தேர்தல், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள நிலையில், வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது, அத்தேர்தலின் முடிவை மாற்றக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது என, மன்னிப்புச் சபையின் அறிக்கை தெரிவித்தது.
நைஜீரியாவின் தற்போதைய ஜனாதிபதி, இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளார். ஆனால் அவர், தனது இனக் குழுவான மந்தைப் பராமரிப்பாளர்களின் பக்கம் சாய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டுகளை ஜனாதிபதியின் தரப்பு மறுத்தாலும், குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
இந்த மோதல்கள், அநேகமான இன - மதக் குழுக்களுக்கு இடையிலான மோதலாக வர்ணிக்கப்படுகிறது. மந்தைப் பராமரிப்பாளர்கள், முஸ்லிம்களாக உள்ள அதேநேரத்தில், விவசாயிகள், கிறிஸ்தவர்களாக உள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக, மந்தைகளுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிரமம், விரிவடைந்துவரும் விவசாயச் செய்கைகள் ஆகியவற்றின் காரணமாக, இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, நைஜீரிய அதிகாரிகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனக் குற்றஞ்சாட்டும் சர்வதேச மன்னிப்புச் சபை, ஜனவரி 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கொல்லப்பட்ட 3,641 பேருக்கு மேலதிகமாக, இன்னும் பல்லாயிரக்கணக்கானோர், இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடுகிறது.
ஜனவரி 2016க்கும் இவ்வாண்டு ஒக்டோபருக்கும் இடையில், 310 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும், அவற்றில் 57 சதவீதமான தாக்குதல்கள், இவ்வாண்டிலேயே பதிவாகின எனவும், மன்னிப்புச் சபை குறிப்பிடுகிறது.
விவசாயிகளுக்கும் மந்தைப் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான மோதலாக இது இருந்தாலும், அநேகமான தாக்குதல்கள், திட்டமிடப்பட்ட தாக்குதல்களாக உள்ளன. இத்தாக்குதல்களின் போது இயந்திரத் துப்பாக்கிகளும் ஏ.கே - 47 துப்பாக்கிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
12 minute ago
22 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
55 minute ago