2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

24 மணிநேரத்தில் 149 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில் இடம்பெற்றுவரும் போரில், முக்கிய புள்ளியாக மாறியுள்ள ஹொடெய்டாவை மீளக் கைப்பற்றுவதற்கான மோதலில், 24 மணிநேர இடைவெளியில், ஆகக்குறைந்தது 149 பேர் கொல்லப்பட்டனர் என, மருத்துவப் பணியாளர்களும் இராணுவத் தகவல் மூலங்களும் தெரிவிக்கின்றனர்.

துறைமுக நகரான ஹொடெய்டாவை மீளக்கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை, யேமன் அரசாங்கமும் அரசாங்கத்துக்குத் துணையான நாடுகளும் ஆரம்பித்துள்ள நிலையில், முக்கியமான அந்நகரத்தைத் தக்கவைப்பதற்கு, போராளிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையிலேயே, இரு தரப்புகளுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. இதன்படி, ஹூதி போராளிகள் 110 பேரும், அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகள் 32 பேரும் கொல்லப்பட்டனர் என, வைத்தியசாலைகளிலுள்ள மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். ஹூதி ஆயுததாரிகளை இலக்குவைத்து, சவூதி அரேபியா தலைமையிலான அரபுக் கூட்டணி, பல விமானத் தாக்குதல்களை நடத்தியது என, அரசாங்கத்துக்கு ஆதரவான தரப்புகள் உறுதிப்படுத்தின.

பதினொரு நாள்களாக இடம்பெற்றுவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹூதிகளால் கட்டுப்படுத்தப்படும் ஹொடெய்டா பகுதிக்கு அண்மையாக, அரசாங்கப் படைகள் நுழைந்துள்ளன. இந்நிலையில், வீதிகளில் மோதல்கள் அதிகரிக்கும் சூழ்நிலை இருப்பதால், பொதுமக்களுக்கான பாதிப்பு அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

ஹொடெய்டா துறைமுகவே, யேமனின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகக் காணப்படும் நிலையில், பட்டினியை எதிர்நோக்கும் அம்மக்களுக்கு, இத்துறைமுகம் முக்கியமானது. யேமனிக்கான உணவுப் பொருட்களில் அநேகமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, இப்பகுதியில் தொடர்ச்சியாக மோதல் இடம்பெறுவது, உணவுப் பொருட்களும் நிவாரணப் பொருட்களும் நாட்டுக்குள் வருவதில் தடங்கலை ஏற்படுமென அஞ்சப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X