Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியும் மோல்டாவும் மறுத்ததையடுத்து மத்தியதரைக் கடலில் 629 அகதிகளுடனுள்ள கப்பலொன்றைப் பொறுப்பேற்பதற்கு ஸ்பெய்ன் இணங்கியுள்ளது.
மோசமடையும் வானிலை காரணமாக குறித்த அகதிகளை மீட்ட பிரெஞ்சு தொண்டு நிறுவனமான எஸ்.ஓ.எஸ் மெடிட்டெரனி அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் வெளியிட்டிருந்த நிலையிலேயே ஸ்பெய்னின் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்நிலையில், மோல்டா கடற்படையால் நேற்று வழங்கப்பட்ட உணவுகளும் பானங்களும் இன்று வரையே போதும் என தொண்டுப் பணியாளர்கள் எச்சரித்திருந்தனர்.
கர்பிணிகள், சிறுவர்கள் உள்ளிட்ட குறித்த அகதிகள் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெய்னின் அறிவிப்பு மிகவும் நேர்மறையான சமிக்ஞையொன்று என டுவிட்டரில் நேற்று முன்தினம் தெரிவித்த எஸ்.ஓ.எஸ் மெடிட்டெரனி, ஸ்பெய்னுக்கு பயணமாவதற்கு சில நாட்கள் எடுக்குமென்ற நிலையில், பலர் கப்பலில் இருக்கின்ற நிலையில் மோசமடைகின்ற வானிலை முக்கியமானது என்று கூறியுள்ளது.
அகதிகளை உள்ளெடுக்க மறுத்த மோல்டாவும் இத்தாலியிலுள்ள புதிய பிரபலமான அரசாங்கமும் அவரவரது கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக மாறி மாறிக்க் குற்றஞ்சாட்டுகின்றன.
தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடன் மட்டியோ சல்வினி உள்துறை அமைச்சராக கடந்த மாதம் பதவியேற்ற பின்னர் அகதிகளுக்கெதிராக இத்தாலி எடுத்த பிரதானமான முதலாவது நகர்வு இதுவாகும்.
இந்நிலையில், ஸ்பெய்ன் கப்பலை உள்ளெடுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து மோல்டாவுடன் இரண்டு நாட்களாகத் தொடர்ந்த அகதிகள் மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து வெற்றி என சல்வினி டுவீட் செய்துள்ளார்.
தனது கிழக்கு துறைமுகமான வலென்சியாவை கப்பல் வந்தடைய அனுமதித்துள்ள சோஷலிச பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ் தலைமையிலான புதிய ஸ்பானிய நிர்வாகம் இது தனது கடமை எனக் கூறியுள்ளது. எவ்வாறெனினும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கான தேவையை வெளிப்படுத்த வேண்டியுள்ளதாக ஸ்பெய்னின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜோசெப் பொரெல் தெரிவித்துள்ளார்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025