2021 ஜூன் 16, புதன்கிழமை

அரையிறுதியில் சென். பீற்றர்ஸ்

Editorial   / 2017 ஜூன் 11 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதற்பிரிவு றக்பி அணிகளுக்கிடையில் நடத்தப்படும், மைலோ ஜனாதிபதிக் கிண்ண நொக் அவுட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, சென். பீற்றர்ஸ் கல்லூரி அணி தகுதிபெற்றுள்ளது. கண்டி திரித்துவ கல்லூரி அணியை வெற்றிகொண்டே, சென். பீற்றர்ஸ் அணி, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

பிரட்பி கேடயத்துக்கான தொடரில், இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, அந்தக் கேடயத்தை இழந்த திரித்துவ கல்லூரி, அந்தப் பின்னணியில், இத்தொடரில் பங்குபற்றியது. மறுபக்கமாக சென். பீற்றர்ஸ் கல்லூரி, பாடசாலைகள் றக்பி தொடரில், தொடர்ச்சியற்ற பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை இடம்பெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் போட்டித் தன்மையுடன் விளையாடின.

நவீன் ராஜரத்தினத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற பந்துப் பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்ட டியாத் பெர்ணான்டோ, அதன் மூலம் ட்ரை ஒன்றைப் பெற்றுக் கொண்டார். மேலதிக புள்ளிகளை, தீக்‌ஷனா தஸாநாயக்க பெற்றுக் கொண்டார். இதன் மூலம், 7-0 என்ற புள்ளிகள் கணக்கில், சென். பீற்றர்ஸ் அணி முன்னிலை பெற்றது.

அதற்குப் பதிலடியாக, திரித்துவ கல்லூரியின் வொரென் வீரக்கோன், ட்ரை ஒன்றைப் பெற்றுக் கொடுத்தார். ஆனால், மேலதிக புள்ளிகளைப் பெற, றஷீன் பண்டாரநாயக்க தவறினார். எனினும், இதற்குப் பதிலடி வழங்கிய சென். பீற்றர்ஸ் அணி, தஸாநாயக்க மூலம், ட்ரை ஒன்றையும் மேலதிக புள்ளிகளையும் பெற்றது. இதனால், 14-5 என்ற புள்ளிகள் கணக்கில், சென். பீற்றர்ஸ் அணி முன்னிலை வகித்தது.

அதைத் தொடர்ந்து, திரித்துவ கல்லூரியின் ஷெனல் அபேவர்தன, சிறப்பான ட்ரை ஒன்றைப் பெற்றார். மேலதிக புள்ளிகளை, பண்டாரநாயக்க பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, திரித்துவ கல்லூரியின் புள்ளிகள், 12ஆக உயர்ந்தன.

தொடர்ந்து, சென். பீற்றர்ஸ் அணியின் ஜேஸன் கருணாரத்ன, ட்ரை ஒன்றைப் பெற்றுக் கொடுத்தார். மேலதிக புள்ளிகளை, தஸாநாயக்க பெற்றுக் கொடுத்தார். இதனால், 21-12 என்ற புள்ளிகள் கணக்கில், சென். பீற்றர்ஸ் அணி முன்னிலை வகித்தது.

எனினும், முதற்பாதி முடிவில், அதிரடியாக விளையாடிய திரித்துவ கல்லூரி அணியின் வொரென் வீரக்கோன் வழங்கிய பந்தை, அணித்தலைவர் நேதன் யீ, ட்ரை ஆக்கினார். மேலதிக புள்ளிகளை, பண்டாரநாயக்க தவறவிட்டார். தொடர்ந்து, வீரக்கோன், மேலுமொரு ட்ரையைப் பெற்றதோடு, மேலதிக புள்ளிகளை, பண்டாரநாயக்க பெற்றுக் கொடுத்தார். இதன்படி, 24-21 என்ற புள்ளிகள் கணக்கில், திரித்துவ கல்லூரி அணி, முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில், சென். பீற்றர்ஸ் அணியின் டியாத் பெர்ணான்டோ, ட்ரையைப் பெற்றார். மேலதிக புள்ளிகளை, தஸாநாயக்க பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து, திரித்துவ கல்லூரியின் ஷெனல் அபேவர்தன, மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட, 14 பேர் கொண்ட அணியாக மாறியது. அதன் மூலம் கிடைத்த பெனால்டியைப் பயன்படுத்தி, பயாஸ் அப்துல்லா, ட்ரை ஒன்றைப் பெற்றார். மேலதிக புள்ளிகளைப் பெற, தஸாநாயக்க தவறினார். இதனால், 33-24 என்ற புள்ளிகள் கணக்கில், சென். பீற்றர்ஸ் அணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, சென். பீற்றர்ஸ் அணியின் ஜேஸன் கருணாரத்ன, ட்ரை ஒன்றைப் பெற்றார். இதன்மூலம், 38-24 என்ற நிலைமை மாறியதுடன், அதுவே போட்டியின் முடிவாகவும் மாறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .