2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனானது யாழ். மாவட்டம்

குணசேகரன் சுரேன்   / 2017 மே 29 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண விளையாட்டு விழாவின் 2017ஆம் ஆண்டு போட்டிகளில், மொத்தமாக 354 புள்ளிகளைப் பெற்று, முதலிடத்தைப் பெற்று, யாழ். மாவட்டம் சம்பியனாகியது.   

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண விளையாட்டு விழா நடைபெற்று வந்தது. இதன் இறுதி நிகழ்வுகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில், நேற்று முன்தினம் (27), நேற்று (28) நடைபெற்றன.  

முன்னதாக, பெரு விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு மைதானங்களில் நடைபெற்றன. தொடர்ந்து, தடகள மைதான நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.  

பெரு, மைதான, தடகள நிகழ்வுகளில், மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் 354 புள்ளிகளைப் பெற்று, யாழ். மாவட்ட அணி சம்பியனானது. 170 புள்ளிகளைப் பெற்ற கிளிநொச்சி மாவட்டம், இரண்டாமிடத்தைப் பெற்றது. 160 புள்ளிகளைப் பெற்ற வவுனியா மாவட்டம், மூன்றாமிடத்தைப் பெற்றது. 132 புள்ளிகளைப் பெற்று, மன்னார் மாவட்டம், நான்காமிடத்தையும், 93 புள்ளிகளைப் பெற்று, முல்லைத்தீவு மாவட்டம், ஐந்தாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.  

இம்முறை 12 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. அவையாவன,   

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பிறேம்தாஸ், 11 செக்கன்களில் ஓடி, 2010ஆம் ஆண்டில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஈ.எடிசன் நிகழ்த்திய சாதனையைச் சமப்படுத்தினார்.  

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.சௌமியா, 13.3 செக்கன்களில் ஓடி, 2013ஆம் ஆண்டு, யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த எம். கமலினி நிகழ்த்திய 13.4 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்தார்.  

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில், எம்.பிறேமதாஸ், 22.20 செக்கன்களில் ஓடி, 2010ஆம் ஆண்டு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.பி.ரூபசிங்க நிகழ்த்திய 22.50 செக்கன்கள் என்ற சாதனையைத் தகர்த்தார்.  

ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டலில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சதீஸன், 15.80 செக்கன்களில் ஓடி, 2014ஆம் ஆண்டு, தான் நிகழ்த்திய 16.30 செக்கன்கள் என்ற சாதனையைத் தகர்த்தார்.  

பெண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டலில், யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.அனித்தா, 16.70 செக்கன்களில் ஓடி, 2016ஆம் ஆண்டில், தன்னால் நிகழ்த்தப்பட்ட 16.80 செக்கன்கள் என்ற சாதனையைத் தகர்த்தார்.  

ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில், மன்னார் மாவட்ட அஞ்சலோட்ட அணி, 44.10 செக்கன்களில் ஓடி, 2010ஆம் ஆண்டு, வவுனியா மாவட்ட அஞ்சலோட்ட அணி நிகழ்த்திய சாதனையைச் சமன்செய்தது.  

ஆண்களுக்கான, 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில், மன்னார் மாவட்ட அணி, 3:25.90 என்ற நேரப்பெறுதியில் ஓடி, 2009ஆம் ஆண்டு, வவுனியா மாவட்ட அஞ்சலோட்ட அணி நிகழ்த்திய 3:29.40 என்ற நேரப்பெறுதியில் என்ற சாதனையைத் தகர்த்தத்.  

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கே.நெப்தலின் ஜொய்சன், 4.40 மீற்றர்கள் உயரம் பாய்ந்து, 2016ஆம் ஆண்டு தான் நிகழ்த்திய 4.36 மீற்றர்கள் என்ற சாதனையைத் தகர்த்தார்.  

பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில், மன்னார் மாவட்ட அஞ்சலோட்ட அணி, 54.30 செக்கன்களில் ஓடி, 2013ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அஞ்சலோட்ட அணி நிகழ்த்திய 58.40 செக்கன்கள் ஏன்ற சாதனையைத் தகர்த்தது.  

பெண்களுக்கான முப்பாய்ச்சலில், கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெ.சுகிர்தா, 10.87 மீற்றர்கள் பாய்ந்து, 2010ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கே.கீர்த்திகா நிகழ்த்திய 10.72 மீற்றர்கள் என்ற சாதனையைத் தகர்த்தார்.  

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், ஜெ.அனித்தா, 3.31 மீற்றர்கள் பாய்ந்து, 2016ஆம் ஆண்டு தன்னால் நிகழ்த்தப்பட்ட 3.30 மீற்றர்கள் என்ற சாதனையைத் தகர்த்தார்.  

பெண்களுக்கான ஈட்டி எறிதலில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வி.கிறிஸ்டினா, 36.31 மீற்றர்கள் தூரம் எறிந்து, 2014ஆம் ஆண்டு, யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.றஞ்ஜிதா நிகழ்த்திய 36.20 மீற்றர்கள் என்ற சாதனையைத் தகர்த்தார்.  

இம்முறை விளையாட்டு நிகழ்வில், சிறந்த தடகள வீரனாக, 200 மீற்றர் ஓட்டத்தில் சாதனை நிகழ்த்திய எம்.பிறேமதாஸும், சிறந்த தடகள வீராங்கனையாக, 100 மீற்றர் ஓட்டத்தில் சாதனை நிகழ்த்திய ஏ.சௌமியாவும் தெரிவு செய்யப்பட்டனர்.  

மேலும், சிறந்த மைதான வீரனாக, நீளம் பாய்தலில் 6.65 மீற்றர்கள் நீளம் பாய்ந்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த என்.நிதுஜனும், சிறந்த மைதான வீராங்கனையாக, நீளம் பாய்தலில் 5.23 மீற்றர்கள் நீளம் பாய்ந்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆரணியும் தெரிவு செய்யப்ப்பட்டனர்.  

அனைத்துப் போட்டிகளிலும் சிறந்த வீரராக, எம்.பிறேமதாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.  

இறுதிப் போட்டிக்கு, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்ட, மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்கள் இமானுவல் ஆர்னோல்ட், பாலச்சந்திரன் கஜதீபன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர், வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகள், அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .