2025 நவம்பர் 19, புதன்கிழமை

தேசிய அணியில் யாழ்.வீரர்கள்

George   / 2015 ஜனவரி 05 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை 19 வயதுப்பிரிவுக்குட்பட்ட 31 பேர் கொண்ட கிரிக்கெட் அணியில் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர்களான பரமானந்தம் துவாரகசீலன், செபமாலைப்பிள்ளை பிளெமின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

இலங்கை 19 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணி, இம்மாதம் நடுப்பகுதியில் பங்களாதேஷ் அணியுடனான  போட்டிகளில் விளையாடவுள்ளது.

 தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள 31 பேர் கொண்ட  பெயர்ப்பட்டியலில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர்கள் இருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இலங்கை தேசிய அணியில் வடபகுதி கிரிக்கெட் வீரர்களும் இணையவேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துதருவதாகவும் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்திருந்த நிலையில் இந்த இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  

சகலதுறை வீரரான துவாரகசீலன், 2014ஆம் ஆண்டு வடக்கின் மாபெரும் போரில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவராக கடமையாற்றியதுடன், 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்ட முரளி நல்லிணக்க கூட்டு அணியின் உபதலைவராகவும் விளையாடியிருந்தார். 

இவரது இடது கைத்துடுப்பாட்டம் இவருக்கு பக்கபலமாக இருப்பதுடன், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் இவர், சென்.ஜோன்ஸ் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக விளங்கியுள்ளார். 

இரண்டாவது வீரரான இடது கை துடுப்பாட்ட வீரன் பிளமின், 3ஆவது துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி விளையாடி வருகின்றார். 2014ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் 4 போட்டிகளில் பங்குபற்றிய இவர் ஒரு சதம், ஒரு அரைச்சதம் பெற்றுள்ளார்.  

இந்த 19 வயதுப்பிரிவு அணியின் தலைவராக காலி றிச்மண்ட் கல்லூரியின் அஸலங்க கடமையாற்றுகின்றார். இவர் முரளி நல்லிணக்க கிண்ண போட்டிகளில் றிச்மண்ட் கல்லூரி அணியை இறுதிப்போட்டி வரையில் அழைத்து வந்த சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X