2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கால்பந்தாட்ட தொடர் நிறைவு

Thipaan   / 2015 ஜூன் 07 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக் கடந்த ஒரு வருட காலமாக தொடராக நடாத்தி வந்த புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

சனிக்கிழமை (06) மாலை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் புத்தளம் போல்டன் மற்றும் யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இத்தொடரின் கடைசி ஆட்டத்துடன் இந்த தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

கடைசியான இந்த போட்டியில் புத்தளம் போல்டன் 03 கோல்களினால் வெற்றியடைந்து 03 புள்ளிகளை பெற்று மொத்தமாக இத்தொடரில் 08 புள்ளிகளை பெற்றுக்கொண்ட போதிலும் முதல் நான்கு இடங்களுக்குள்  இடம்பிடிக்க முடியாமல் தொடரிலிருந்து விடைபெற்றது.

இப்போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், எம்.எஸ்.எம். நௌபி, ஏ.எம். பஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினர்.

நடைபெற்று முடிந்திருக்கின்ற இந்த போட்டி தொடரில் புத்தளம் லிவர்பூல் அணி சம்பியனாக தெரிவாகியுள்ள நிலையில், 02ஆம், 03ஆம், 04ஆம் இடங்களை பெற்ற அணிகள் எது என்பதை தீர்மானிப்பதில் இழுபறி நிலையொன்று தோன்றியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (05) நடைபெற இருந்த புத்தளம் ட்ரிபல் செவன் மற்றும் கல்பிட்டி பேர்ல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது கல்பிட்டி பேர்ல்ஸ் அணி சமூகம் தராத நிலையில் அன்று பிரதம நடுவராக கடமையாற்ற இருந்த எம்.ஓ. ஜாகீர் உத்தியோகபூர்வமாக போட்டியை ஆரம்பித்து மறு வினாடியே போட்டியை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தார்.

அந்த போட்டியின் முடிவு என்ன என்பது பற்றி புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால் இதுவரையும் தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இத்தகைய ஒரு சிக்கலான நிலை தோன்றியுள்ளது.

தடையான அந்த போட்டியானது ட்ரிபல் செவன் அணிக்கு வெற்றி எனும் மகுட த்தின் கீழ் சாதகமாக அமைந்தால் அவ் அணியானது தனது 35 வருட வரலாற்றில் முதற் தடவையாக 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், நியூ ஸ்டார்ஸ் அணி 13 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும்,  யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணி 10 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொள்ளும்.

ஒரு வேளை, தடையான கல்பிட்டி பேர்ல்ஸ், ட்ரிபல் செவன் அணிகளுக்கிடையிலான அந்த  போட்டி மீள நடைபெற்று அந்த போட்டியில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணி வெற்றி பெற்றாலோ அல்லது போட்டி சமநிலை அடைந்தாலோ சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நியூ ஸ்டார்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் ட்ரிபல் செவன் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

எது எப்படியோ இந்தபோட்டி தொடரானது பிற அணிகளின் வெற்றி தோல்விகளிலேயே தமது அணிகளின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்க வேண்டிய நிலையை சகல அணிகளுக்கும் தோற்றுவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .