2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாது : . ராம்

Freelancer   / 2023 ஜூலை 30 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. இனவாதிகளே இவ்வாறான பிரசாங்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மாகாணசபைக்குரிய முழுமையான அதிகாரங்களுடன் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு தெரிவிக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் மாகாணசபை முன்னாள் சிரேஷ்ட உறுப்பினருமான  சீ.வை.பி. ராம் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல் விரைவாக நடத்தவேண்டியதன் தேவை குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாகாணசபை முறைமை அமுலுக்கு வந்த காலத்தில் இருந்து அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவில்லை. அதேநேரம் மாகாணசபையில் இருந்து வந்த மேலும் சில அதிகாரங்கள் கடந்த 10வருடங்களில் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.பசில் ராஜபக்ஷ் ஒவ்வொரு காரணங்களை தெரிவித்து, சில சட்டங்களை ஏற்படுத்தி  மாகாணசபைக்குரிய சில அதிகாரங்களை பலாத்காரமாக மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தார்.

அத்துடன் மாகாணசபைகள் ஆரம்பகாலத்தில் மாகாணங்களுக்கு பல சேவைகளை செய்து வந்திருக்கின்றன. மாகாணசபையின் நீண்டகால உறுப்பினராக இருந்தவன் என்றவகையில், அந்த காலத்தில் நாங்கள் பல சேவைகளை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று மாகாணசபைகள் ஆளுநர்களுக்கு கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சில மாகாணங்களுக்கு அரசியல் தெரியாத ஆளுநர்களே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மக்களுடன் எந்த தொடர்பும் இல்லை. மக்களுக்கு அவர்களை சந்திக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

அதேநேரம் மாகாணசபைகளுக்கு அமைச்சுக்கள் இருக்கிறன. அந்த அமைச்சுக்கள் ஊடாக பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டு மாகாணசபை அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் நிறுவனங்கள் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வந்திருக்கிறன. ஆனால் தற்போது மாகாணசபை இயங்காமல் இருப்பதால், குறிப்பாக மாகாண பாடசாலைகள், வைத்தியசாலைகள் எந்த அபிவிருத்தியும் இல்லாமல் இயங்கி வருகின்றன. பாடசாலைகளில் பாரிய வளப்பற்றாக்குறைகள் இருந்து வருகின்றன. முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாமையாமல் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று மாகாண வைத்தியசாலைகளிலும் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆளணி பற்றாக்குறை, மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு, வளப்பற்றாக்குறை என பல குறைபாடுகள் நிலவி வருகின்றன. இவை எதுவும் கண்காணிக்கப்படுவதில்லை. மாகாணசபைக்கு கீழ் இருக்கும் வீதிகள் செப்பனிடப்படாமல்,  குண்டும் குழியுமாக காணப்படுகின்றன எமது காலத்தில் மாகாணசபைக்கு கீழ் செயற்பட்டுவந்த சில பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலைகளுக்கு இருக்கும் வசதிகளை செய்துகொடுத்திருக்கிறோம்.

எனவே மாகாணசபைகள் தொடர்ந்தும் இவ்வாறு இயங்காமல் இருக்க முடியாது. மாகாணசபைகளுக்கு அதிகாரம் வேண்டுமா மாகாண சபை தேர்தல் வேண்டுமா என ஜனாதிபதி கேட்கிறார்.  காணி, பொலிஸ் அதிகாரங்களுன் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்றே நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவி்க்கிறோம்.

அத்துடன் மாகாணசபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என தெற்கில் இருக்கும் அரசியல்வாதிகள் பிரசாரம் செய்துவருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. இனவாதிகளே இவ்வாறான பிரசாங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாகாணசபைகளுக்கு சட்டத்தினால் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை முழுமையாக வழங்குவதன் மூலம் அது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரமானதல்ல. தென்பகுதிக்கும் அந்த அதிகாரம் கிடைக்கப்பெறுகிறது.

அதனால் காணி பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்களாக சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும்  மாகாணசபைகளுக்கு மீண்டும் வழங்கவேண்டும் என்பதுடன் மாகாணசபை தேர்தலையும் விரைவாக நடத்த வேண்டும் என தெரிவிக்கிறோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X