Kogilavani / 2011 மார்ச் 29 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
.gif)
ஈழத்தின் மண் வாசனையை, கலாசார விழுமியங்களை, மரபுகளை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை எடுத்தியம்புவதில் பாரம்பரிய நாட்டுப்புறக் கூத்துக்களுக்கு முக்கிய பங்குள்ளது.
மூதாதையர் கட்டிக் காத்து வந்த இந்த வழக்காறுகளை இன்றைய இளம் சந்ததியினர் அறிந்திருக்க துளியேனும் வாய்ப்பில்லை. எமது சகோதர நாடுகளும் இலங்கைக்கான இந்த நாட்டாரியலை அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
வழக்கொழிந்துபோன சில மரபுகளை ஆவணமாக்கி அடுத்த சந்ததிக்கு வழங்குவதற்கான முயற்சியாகவும், சர்வதேசமும் எமது பாரம்பரிய கலைகளை அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பமாக அமைந்ததுதான் யாழ். இசைவிழா 2011.
'யாழ். இசை விழா 2011' கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மாநகர சபை மைதானத்தில் பார்வையாளர்களின் பலத்த கரகோசத்துடன் இனிதே ஆரம்பமானது. தொடர்ந்து 3 தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வினை நோர்வே தூதரகம், யு.எஸ்.எய்ட், சேவா லங்கா மற்றும் அருஸ்ரீ கலையகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில், ஈழத்தின் பாரம்பரியக் கூத்துக்கள், நாட்டார் பாடல்கள், வில்லிசை என்ற பல பாரம்பரிய கலைகள் மேடையேற்றப்பட்டன. இதேவேளை, தங்களது பாரம்பரிய கலைகளையும் எமது நாட்டவர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோர்வே, தென்னாபிரிக்கா, இந்தியா, நேபாளம், பலஸ்தீனம் ஆகிய 5 நாடுகளின் பாரம்பறிய கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வில் மேற்கூறப்பட்ட 5 நாடுகளும் கலந்துகொண்டதால் இது ஒரு சர்வதேச நிகழ்வாக கருதப்படுகின்றது.
சூழலும் அமைப்பு முறையும்
இவ்விழாவுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த இடத்தின் சூழலே இந்நிகழ்வின் வெற்றிக்கு ஒரு காரணமாகியது. களப்பினால் சூழப்பட்ட, ஒரு வெட்டவெளியரங்கான யாழ். மாநாகர சபை மைதானத்தில் இவ்விழா நடைபெற்றது. இச்சூழல் பார்வையாளர்களுக்கு மன மகிழ்வை தரும் வகையில் அமைந்திருந்தது.
வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் இலகுவாக அறிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது வாயிற் பிரதேசம். இதில் உள் நுழையும்போதே மனதை கவரும் வகையில் வரவேற்பு கோபுரம். ஆலய வடிவில் அமைக்கப்பட்ட அந்த கோபுரம் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வசீகரமாக இருந்தது.
அதனுள் உள்நுழைய, பல கொட்டகைகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது பிரதான மேடை. கொட்டகைகள் கூத்துக் கலைஞர்களுக்கான ஒத்திகைக்கான இடமாகவே அமைக்கப்பட்டிருந்தன. 3 நாட்களுக்கும் மேடையேற்ற வேண்டிய கூத்துக்கள் இந்த கொட்டகைகளுக்குள் ஒத்திகை பார்க்கப்பட்டன.
வெறும் ஓலைகளால் வேயப்பட்டு வழங்கப்பட்ட அந்த கொட்டகைகளை கூத்துக்கலைஞர்கள் தங்களுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிக்கொண்டனர். ஒரு கொட்டகைக்குள் உள்நுழைந்தால் அவர்கள் எங்கிருந்து வந்திருக்கின்றார்கள், இவர்கள் விழாவில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை மற்றவர்கள் இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் அவர்கள் நடத்தவுள்ள கூத்துக்களின் பெயர்கள், எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பவற்றை சுவரொட்டிகள், பதாகை என்பவற்றில் குறிப்பிட்டு கொட்டகைகளில் தொங்கவிட்டிருந்தார்கள்.
.gif)
அதேபோல் ஒவ்வொரு கூத்துக்காரர்களும் தாங்கள் கூத்துக்களினூடாக சாதித்த விடயங்களை புகைப்படங்களாக பிடித்து காட்சிப்படுத்தியிருந்தனர். இது அவர்கள் அந்த கூத்துக்களின் மீது கொண்டிருந்த பற்றை பிரதிபலித்திருந்தது. மேலும் அவர்கள் அளிக்கை செய்யும் அந்த கூத்துகளின் ஆடைகள், இசைக் கருவிகள், மேடையை அலங்கரிக்கும் பொருட்கள் என்பன கொட்டகைக்குள் முன்பே ஒரு வரிசையில் அடுக்கப்பட்டிருந்தன. அவர்கள் தங்களது கலையை முதலில் இறைவனுக்கு சமர்ப்பிப்பதற்காக கொட்டகையின் முன்னால் கும்பம் அமைத்து பூஜை செய்து வைத்திருந்த ஒரு சமய நம்பிக்கையையும் அங்குக் காணக் கூடியதாக இருந்தது.
இவை யாழ். இசை விழாவினை நடத்துவதற்கான சூழலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும் சில குறைகளும் காணப்படவே செய்தன.
இவ்விழாவினை பார்ப்பதற்காக உள்நுழையும்போதே முதலில் தெரிந்தது ஒரு கொட்டகை. அந்த கொட்டகை வரவேற்பு கொட்டகையாக இருந்தாலும் மேடையின் வீரியத்தை அது தன்பர்க்கம் ஈர்த்துவிட்டது. ஓரத்தில் அல்லது மேடையின் வலது புறம், இடது புறமாக அந்த கொட்டகை அமைக்கப்பட்டிருந்தால் வாயிலில் உள்நுழைபவர்களுக்கு நேரடியாக மேடை தென்பட்டிருக்கும். ஆனால், முதலில் கொட்டகையும், இரண்டாவதாக மேடையும் தென்பட்டமை மேடையின் வசீகரத்தை குறைத்து விட்டது.
மேலும் கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் அம்சமாக இந்த கலை விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் அதனை முழுமையாக கிராமிய தன்மையுடன் கொடுத்திருக்கலாம். பார்வையாளர்கள் சிலர் கதிரைகளிலும், வேறு சிலர் நின்றுகொண்டும், சிலர் பாய் போட்டு அமர்ந்து கொண்டும் நிகழ்ச்சியை பார்த்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. அனைவரும் அமர்ந்து பார்க்கும்படியான வசதிகள் செய்யப்பட்டிருப்பின் அது இன்னும் இந்நிகழ்வை மெருகூட்டியிருக்கும்.
.gif)
ஒழுங்கமைப்பு
இந்நிகழ்வில் ஒவ்வொரு கலை நிகழ்வுக்கும் 20 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஒரு நிகழ்வு மேடையேற்றி முடியும் முன்பே அடுத்த நிகழ்வு மேற்கொள்பவர்கள் மேடைக்கருக்கில் நீண்டநேரம் காத்திருந்தனர். இவர்கள் காத்திருப்பதற்காகவேணும் ஒரு கொட்டகை வசதியை மேடையின் பின்புறம் ஏற்படுத்தியிருந்தால் அவர்கள் சோர்வின்றி தங்களது நிகழ்ச்சியை செய்திருப்பார்கள். மேடையேறுவதற்காக பல நிமிடங்கள் அவர்கள் அங்குக் கால்கடுக்க நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதைவிட ஒரு நிகழ்வு முடிந்தபின் 5 நிமிடங்கள் கழித்து மற்றைய நிகழ்வை ஆரம்பிக்காமல்,10 நிமிடங்கள் வரையும் இழுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மேடைக்கு செல்வதற்காக இரண்டு பக்கமும் வழிகள் இருந்ததால் பார்வையாளர்களிடையே எந்த பக்கம் செல்ல வேண்டும் என்ற தடுமாற்றம் ஒன்று நிலவியதை காணக்கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வை தொகுத்து வழங்கியவர்கள் ஆங்கிலம்இ தமிழ்இ சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் தொகுத்து வழங்கியிருந்தாலும் இடையில் சிங்களத்தில் தொகுத்து வழங்கியவர் காணாமல் போனதை இங்கு குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பில் சரியானதொரு திட்டமிடல் இல்லாமை பெரிதொரு குறையாக காணப்பட்டது. மாலை நிகழ்வுகள் நான்கு மணிக்கு ஆரம்பிப்பதாக குறிப்பிட்டிருந்த போதும் முதல் நாள் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு 5 மணி கடந்தது. இதனால் இரவு 10 மணிக்கு முடியவேண்டிய நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் முடிவு பெறவில்லை.
தொலைவில் இருந்து வந்தவர்கள் தங்களுக்கு வழங்கிய நேரத்திற்கு ஏற்ப தங்களது திட்டமிடலை மேற்கொண்டு இருந்தார்கள். நேரம் தாமதமானதால் அவர்களும் முரண்பட்டுக் கொண்ட விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
'இவ்விழாவை ஒழுங்கமைத்தவர்கள் மற்றவர்களைப் போலன்றி குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து விடுவார்கள் என்று எண்ணியிருந்தோம். ஆனால் இங்கும் வழமையான விடயத்தையே அவதானிக்கின்றோம்' என்று பல விமர்சனங்கள் காதில் விழுந்தன.
நிகழ்வின் நோக்கமும் வெற்றியும்
.jpg)
1.ஒன்று கூடல்
இனம், மதம், மொழி பேதங்கள் இன்றி தமிழர், சிங்களவர், முஸ்லிம், பேகர்கள் என அனைத்து கலைஞர்களையும் ஒரே இடத்தில் சந்திக்கச் செய்வது இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேறியதை மறுக்க முடியாது. இந்நிகழ்வில் தமிழர், சிங்களவர், முஸ்லிம், பேகர் இனத்தவர்கள் என அனைவரினதும் நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. இதனை பார்ப்பதற்காக வந்தவர்கள் இன, மத பேதமின்றி ஒரே இடத்தில் நின்று அவற்றை பார்த்து கரகோசமிட்டனர். இது அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க செய்தததுடன் நட்பையும் வளர்த்துள்ளதை மறுக்க முடியாது.
2.கலைகள் பற்றிய அறிதல்
கலைகள் பற்றிய அறிதலையும், புரிதலையும் பெரியோர், சிறியோர், இளம் தலைமுறையினர் என அனைவரிடத்திலும் ஏற்;படுத்துவது இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அந்த நோக்கம் அடையப்பட்டுள்ளது.
இம்மேடையில் 23 கிராமிய கலைகள் மேடையேற்றப்பட்டன. அவை மேடையேற்றப்படும்போது அவைபற்றிய விளக்கங்களும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந் நிகழ்விற்காக வருகை தந்த அனைவரும் ஒவ்வொரு பிரதேசத்தவர்களது கலையம்சம் எதுஇ அவை எதற்காக ஆடப்படுகின்றது போன்ற பல விடயங்களை அறிந்து கொண்டனர்.
இந்நிகழ்வை பார்வையிடுவதற்காக பல்கலைகழகங்களில் இருந்தும் கல்வியற் கல்லூரிகளில் இருந்தும் வருகை தந்த மாணவர்கள் மேடைக்கு முன்னால் அமர்ந்து மேடையேற்றப்பட்ட அனைத்து கலையம்சங்கள் குறித்தும் குறிப்பெடுத்துக் கொண்டமையை குறிப்பிட்டு கூறியாகவேண்டும்.
அதேவேளை இங்கு வருகை தந்த ஏனைய 5 நாடுகளினதும் கலையம்சங்களும் அதற்காக அவர்கள் பயன்படுத்திய புதுவித வாத்தியக்கருவிகள் குறித்தும் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. இங்கு 3 மொழிகளிலும் தொகுத்து வழங்கப்பட்டதால் எமது கலை பற்றிய அம்சங்களை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒரு சில கலையம்சங்களை அவர்கள் தமது ஒளிநாடாவில் பதிவு செய்து கொண்டிருந்தனர். இதனால் எமது கலைபற்றி சர்வதேசம் அறிய இவ்விழா துணை புரிந்தது.
3.கலைகளை ஆவணப்படுத்துதல்
பாரம்பரிய கலைகளை பாதுகாத்து அவற்றை அடுத்த சந்ததிக்கு ஓர் ஆவணமாக வழங்கவேண்டும் என்பது இந்நிகழ்வின் பிரதான நோக்கங்களில் ஒன்று. இங்கு இடம்பெற்ற கலைகளை பத்திரிகைகளும் இலத்திரனியல் ஊடகங்களும் உலகின் சகல பாகங்களுக்கும் எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியற் கல்லூரி மாணவர்கள் என பல பிராந்தியங்களில் இருந்து வருகை தந்தவர்கள் இந்நிகழ்வின் முக்கிய அம்சங்களை குறிப்பெடுத்துக் கொண்டனர். இதைவிட இந்நிகழ்வை ஒருசில ஊடகங்கள் முழுமையாக ஒளிப்பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. எனவே இவை அடுத்த சந்ததிக்குரிய ஆவணங்களாகக் கூடும்.
அதேவேளைஇ வேர்விட்டு போகும் எமது பாரம்பரியங்களை மீண்டும் துளிர்விட இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே கூறவேண்டும். கலைகளில் ஈடுபாடில்லாதவர்கள்கூட இந்நிகழ்வை உணர்வு பூர்வத்துடன் பார்த்திருந்தால் நிச்சயம் அவர்களுக்கும் இக்கலையில் ஆர்வம் ஏற்பட்டிருக்கும்.
pix by : kushan pathiraja
nanthakumar Thursday, 31 March 2011 03:55 PM
எமது பாரம்பரிய கலைகளை எமது மக்கள் உணராத வகையில் எந்த கலையினையும் முன் கொண்டு செல்ல முடியாது. எங்களுக்கான கலைகளை நாங்கள் பேணிக் கொள்வோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .