2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விடயங்களில் புதுக்கவிதையும் ஒன்று'

Kogilavani   / 2014 ஜனவரி 20 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


'தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விடயங்கள் பல உண்டு. அதில் புதுக்கவிதையும் ஒன்று. புதுக்கவிதை என்பது பழையதை புதுமையாகக் கூறுவது. அதன் வளர்ச்சி தொடர்ந்து கொண்டேதானிருக்கும்' என மணிப் புலவர் மருதூர் ஏ.மஜீத் தெரிவித்தார்.

ராஜகவி விருது பெற்ற ராகில் எழுதிய 'மொழி ஒளி' நூல் வெளியீட்டு விழா கண்டி தமிழ் சங்கம், கண்டி இந்து கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை  (19) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'புதுக் கவிதையில் கவித்துவம் இல்லை என யாரும்நினைக்க வேண்டாம். கவிதைக்குறிய அத்தனை பண்புகளும் அதில் உண்டு. ஆனால் அது புதுவடிவில் மாறுவதுதான் வித்தியாசமானது.

இதற்குப் பல உதாரணங்களைக் கூறமுடியும். சுமார் 1400 வருடங்களுக்கு மேல் முஹம்மது நிபி(ஸல்) குகையில் ஒளிந்துக் கொண்ட சம்பவம் இதுவரை எத்தனையோ நூல்களில் எழுதப்பட்டு விட்டன. பக்கம் பக்கமாகப் பலர் எழுதி விட்டனர். அச்சம்பவத்தின் சுருக்கம் இதுதான்.

நபி முஹம்மத் (ஸல்) மக்காவை விட்டு மதினாவிற்கு இரவோடு இரவாககத் தப்பிச் சென்றார்கள். அவரை கொலை செய்ய ஒரு கூட்டம் துரத்திக் கொண்டிருந்தது. மேலே சொன்ன குகையில் நபியவர்கள் ஒளித்துக் கொண்டார்கள்.

அவ்வாறு அவர் உள்ளே சென்ற பிறகு சிலந்திகள் வலை பின்ன ஆரம்பித்தன. இதன் காரணமாக பின்னே வந்த எதிரிகள் பார்த்தார்கள் யாரும் அப்படி உள்ளே சென்றிருப்பின் சிலந்தி வலைகள் உடைந்திருக்கும் அப்படி இல்லாத காரணத்தால் இங்கு யாரும் உள் நுழைந்திருக்க முடியாது எனக் கருதி திரும்பி விட்டனர். இதுபற்றி பாடல்கள் ஆக்கங்;கள் ஏராளம் உண்டு. ஆனால் கவிக்கோ அப்துர் றஹ்மான் அதனை புதுக் கவிதை வடிவில் அழகுறப் பின்வருமாறு கூறினார்.

'தவ்ர்மலையே பெருவாயே
உள்ளே இருக்கும் இரகசியத்தை
உளரிவிடுவாய் என்பதாலா
உன்வாய் பின்னப்பட்டது'

என்று அழகாகக் கூறுகின்றார்.
இன்னொரு இடத்தில் 'இரும்புவலை தேவையில்லை சிலந்தி வலை போதும்' என்று கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் கவிஞர்களின் கற்பனா சக்தியை புது வடிவில் எடுத்துக்காட்டுவதாகும். இப்படிப் பல உதாரணங்கள் கூறலாம்.

அதேபோல் இன்றைய கதாநாயகன் ராஜகவி ராகில் ஓர் இடத்தில் கூறுகின்றார் 'கூந்தல் மதியே நீ பகலில் வந்தால் அது இரவாகி விடும்' என்கிறார் இது எத்தகைய கற்பனை வளம். நாம் ஒரு போதும் கூந்தல் மதி என்று கூறுவதில்லை.  மற்றது பகலையே இரவாக்கும் அளவிற்கு கூந்தல் கருமை என்பது எடுத்துக் காட்டப்படுகிறது. இன்னோர் இளம் பெண் கவிஞர் ஒரு இடத்தில் குறிப்பிட்டார். 'சீதனம் என்பது முதுகெழும்பில்லாத ஆண்களுக்குக் கொடுக்கப் படும் ஒத்தனம்' என்று. இப்படி இன்னும் கூறலாம் என்றார்.

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் துரைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தெரிவித்ததாவது-

மொழி என்பது ஒரு அடையாளம். ஒரு ஊடகத்திற்காக அது ஒரு ஊடகமாகத் தொழிற்படுகிறது. வடமொழியின் பிரவேசம் தமிழை மூழ்கடிக்க எடுத்த முயற்சிகளும் உண்டு. அப்படியான காலக்கட்டங்களில் தமிழ் புலவர்கள் தமிழை மீட்டெடுத்தனர். கம்பர் போன்றவர்கள் இதன் காரணமாக 'கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழே' என்று எல்லாம் மிகைபடக் கூறி தமிழை வளர்தெடுத்தனர்.

அதன் பிறகு 'சமஷ் கிருதம் தெய்வீக மொழி' என்ற தோற்றப் பாடு காரணமாகவும் ஆரிய மொழிகளின் வளர்ச்சிகாரணமாகவும் தமிழ் மொழி சவால்களை எதிர்கொண்டதாகக் கூறினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .