2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கலை இலக்கிய மன்றங்களுக்கிடையிலான போட்டி

Super User   / 2014 மார்ச் 05 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கலை இலக்கிய மன்றங்களுக்கிடையில் கூத்து, இசைநாடகம், கூத்துவழி நடனம் ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகம் இன்று (05) அறிவித்துள்ளது.

வடமாகாண பாரம்பரியக்கூத்துக்களை எதிர்கால சந்ததியினருக்குக் கையளித்தல், அடையாளப்படுத்தல், சர்வதேச ரீதியில்  பிரபல்யப்படுத்தல் போன்றவற்றை பொது நோக்காகக் கொண்டு ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இந்தப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

இப்போட்டிகளில் வடமாகாண மட்டத்தில் முதல் மூன்று நிலைகளைப் பெறும் மன்றங்களுக்கு ஜனாதிபதி விருதாக 1 இலட்சம் ரூபாவும் ஆளுநர் விருதாக 75,000 ரூபாவும் முதலமைச்சர் விருதாக 50,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

போட்டியின் விதிமுறைகளாக 30 தொடக்கம் 35 நிமிடங்களைக் கொண்ட கூத்துப்போட்டியில் வடமோடி, தென்மோடி, வடமோடி பாங்குகளையும் கதகளியையும் உள்ளடக்கிய முல்லை மோடிக்கூத்து, மன்னார் பிரதேசத்தில் ஆடப்பட்டு வரும் வடபாங்கு, தென்பாங்கு கூத்து, சிந்துநடைக்கூத்து ஆகியவற்றில் ஒன்றினை மேடையேற்ற வேண்டும்.

இசை நாடகம் 30 முதல் 35 நிமிடம் கொண்டதாகவும் வாத்தியக்கருவி நீங்கலாக 5 முதல் 12 பேர் வரையில் ஆற்றுகை செய்யவேண்டும். இதில் அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம், கோவலன் திருமணம், பக்த நந்தனார், ஏழுபிள்ளை நல்லதங்காள், ஞானசவுந்தரி பவளக்கொடி, சாரங்கதாரா பூதத்தம்பி ஆகிய இசை நாடகங்களுள் ஏதாவது ஒன்றினை  மேடையேற்றலாம்.

கூத்து வழி நடனப் போட்டியில் 5 முதல் 12 பேர் வரையில் பங்குபற்றமுடியும் என்பதுடன், 8 தொடக்கம் 10 நிமிடங்கள் கொண்டதாக இருப்பதுடன் வடமாகாணத்தில் ஆடப்பட்டு வரும் வடமோடிக்கூத்துக்கள், தென்மோடிக்கூத்துக்கள், முல்லைமோடிக்கூத்துக்கள், மன்னார் பிரதேச வடபாங்கு தென்பாங்கு  கூத்துக்கள்  மற்றும் வடமாகாணத்தில்  ஆடப்படும் கூத்துக்களில்  இருந்து  உருவாக்கப்படலாம் என ஆளுநர் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .