2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அனர்த்த அவலம் தொடரும்?

Menaka Mookandi   / 2017 மே 29 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

“வங்காள விரிகுடா கடற் பகுதியில் நிலவும் தாழமுக்கம், பங்களாதேஷ் நோக்கிப் பயணிக்கும் நிலையில், வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். இந்த மாற்றம் ஏற்பட்டால், இன்றும் நாளையும், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் வடமேல் மாகாணத்திலும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான  மழைவீழ்ச்சி, அங்கு பதிவாகக்கூடிய சாத்தியம் உள்ளது என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தது.  

“மேலும், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய நிலை காணப்படுவதால், களுத்துறை மாவட்ட மக்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், கடற்பிரதேசங்களை அண்மித்த பகுதியில் வாழ்வோர், அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஜே.ஜயசேகர தெரிவித்தார்.  

நாட்டின் 15 மாவட்டங்களை ஆட்கொண்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக, 151 பேர் உயிரிழந்துள்ளதுடன் 111 பேர் காணாமற்போயுள்ளனர். அத்துடன், 95 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நான்கரை இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இரத்தினபுரி, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, மாத்தளை, கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்கள், அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளன.

“விடா மழை, வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, இம்மாவட்டங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 12 ஆயிரத்து 565 குடும்பங்களைச் சேர்ந்த 435,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இந்நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில் 71 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 14 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 47 பேரும், இவ்வனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்” என்று, அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அனர்த்தங்கள் தொடர்பில், அவர் தொடர்ந்து தகவலளிக்கையில் கூறியதாவது,

“நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாடாளாவிய ரீதியில் 250 வீடுகள் முற்றாகவும் 1,085 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. மேலும் 24,735 குடும்பங்கள், தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

குடிநீர்

“இந்த அசாதாரண வானிலை காரணமாக, சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாத்தறை, தாத்துவல பகுதிகளில், முடிந்தளவு நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

“குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் ஏதேனும் சிக்கல் நிலவினால், 0777724360/ 07777891332/ 0714532222 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறியத்தரவும்.

“இந்த இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

மின்சாரம்

“இதேவேளை, இந்த வானிலை மாற்றம் காரணமாக, சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை, காலி,  இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலேயே, பெருமளவு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

“மாத்தறைப் பகுதியில், 1 இலட்சத்து 36 ஆயிரம் வரையிலான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், மின் இணைப்புத் துண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, மெகா வோல்ட் 8ஐக் கொண்ட மின்பிறப்பாக்கிகளைப் (ஜெனரேட்டர்) பொருத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“மேலும், இந்த அனர்த்தம் காரணமாகச் சேதமடைந்த மின் வாசிப்புமானிகளுக்குப் பதிலான புதிய வாசிப்பு மானிகள்,  மக்களுக்கு இலவசமாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிவேக நெடுஞ்சாலை

“தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வேயங்கொடயில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், பின்னத்துவ வெளியேற்றப் பகுதி வரை இடைநிறுத்தப்படுகின்றன.

“பின்னத்துவ ஊடாக, அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், வேயங்கொடைக்கு திருப்பப்படும். அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோர், ஆபத்தான நிலைமைக்கு முகங்கொடுத்தால், 1969 எனும் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறியத்தரவும்.

சுகாதாரம்

“தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்துக்குமென விசேட வைத்தியக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மழை, வௌ்ளம் காரணமாக, இதுவரையில் எவ்வித தொற்றுநோய்களும் பரவவில்லை. எனினும், அவ்வாறானதொரு நிலைமை​ ஏற்படுவதைத் தடுக்கும் ​வகையிலான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“மேலும், செஞ்சிலுவைச் சங்கமும், பணியில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கமும், தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

“மாத்தறை மாவட்டத்துக்கு, இதுவரை சுமார் 50 ஆயிரம் குடிநீர்ப் போத்தல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குத் தேவைப்படும் மருந்து வகைகள், ஹெலிகொப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

“இதேவேளை, சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்துக் கொடுப்பதற்கான மொத்தச் செலவையும், அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. சேதமடைந்த வீட்டுப் பொருட்களைப் பெற்றுக்கொடுக்க நிதி வழங்கப்படுவதுடன், பாதிப்புக்கு ஏற்றவகையில் தனித்தனியாக நட்டஈடு வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” என, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வானிலை நிலைவரம்

வானிலை கருத்துரைத்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஜே.ஜயசேகர,

“குக்குலே கங்கை அணை உடைந்துள்ளதாகப் பரவி வரும் செய்தியில், எவ்வித உண்மையுமில்லை. அதனால், மக்கள் தேவையின்றிப் பீதியடையத் தேவையில்லை” எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், “தற்போது வரையில், ஜிங், களு, களனி ஆகிய கங்கைகளின் நீர் மட்டம் சாதாரணமாக உள்ளதாகவும்  நில்வளவை கங்கையின் நீர் மட்டமே அதிகரித்துள்ளதாகவும் பகுதிகள் நீர்ப்பாசனப் பணிப்பாளர்  எம்.எம். துரைசிங்கம் தெரிவித்தார்.

“மேலும், களுத்துறை, வாத்துவ மற்றும் பாணந்துறை மக்கள், தற்போதைக்கு அச்சம்கொள்ளத் தேவையில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.  “களு கங்கையின் நீர் மட்டம் சாதாரண நிலையிலேயே உள்ளதால், களுத்துறை - பனாபிட்டிய அணை நிரம்பி வழியக்கூடிய நிலை குறைவாகவே காணப்படுகிறது. அதனால், களுத்துறை, வாத்துவ மற்றும் பாணந்துறை மக்கள், தற்போதைக்கு அச்சம் கொள்ள தேவையில்லை.

“எதிர்வரும் தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதால், ஜிங், களு, களனி பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

“திடீரென்று வௌ்ளம் ஏற்படும் என்பதால், நில்வளவை நீர்த்தேக்கத்துக்கு அருகில் இருப்போர், அவதானமாக இருக்க வேண்டும்.  இதன்படி, கொடகம, ஹித்கெடிய, துடாவ, மாலிம்பட பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவதானத்துடன் செயற்பட வேண்டும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .