Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

“இந்நாட்டு இணையத்தள ஊடகங்கள் பல, பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவ்வாறு அவதூறான செய்திகளை வௌியிடும் இணையத்தளங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நீதிச் சேவைச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீதிச்சேவை அதிகாரிகளின் வருடாந்த மாநாடு, ஜா-எலயில்
உள்ள பெகாசஸ் ரீப் ஹோட்டலில், நேற்று (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,
“நீதித் துறையில் பணியாற்றுபவர்களுக்கு நியாயமான சம்பள முறைமையொன்று இல்லை என்ற பிரச்சினையை அரசாங்கம் விளங்கிக்கொண்டுள்ளதுடன், சுதந்திரமாக பக்கச்சார்பின்றி தமது சேவையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக, அத்துறையில் உள்ள அனைத்து பதவியினருக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான சம்பள முறைமையொன்றை நடைமுறைப்படுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
“அரசாங்கத்தின் கொள்கையை, நல்லாட்சி பெயர்ப்பலகையுடன் மட்டுப்படுத்திவிடாது நீதித்துறை, அரச சேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருக்கவேண்டிய சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்படும். நிறைவேற்று அதிகாரத்தின் நிழல், எவ்வளவு தூரம் நீதித்துறையின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வந்தது என்பதை, கடந்த சில தசாப்தங்களை மீட்டிப்பார்ப்பதன் ஊடாக அனைவரும் புரிந்துகொள்ள முடியும். நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும் பக்கசார்பின்மையையும் ஏற்படுத்துவது, அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் .
“நீதிமன்றமும் சட்டமும், அனைவருக்கும் நியாயமாக இருக்கவேண்டும் என்பதுடன், தராதரங்களுக்கு ஏற்ப நீதிமன்றத்திலும் சிறைச்சாலையிலும் வெவ்வேறான கவனிப்புகள் இருப்பதாக, பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு துறைகளிலிருந்தும் எழும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இத்துறையில் உள்ள அனைவரும் உடனடியாக கவனம்செலுத்த வேண்டும். நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் நியமனம் மற்றும் பதவியுயர்வுகளை வழங்கும் போது, திறமைக்கும் அனுபவத்துக்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் தாராளமாக இடமளித்துள்ளது” என, அவர் மேலும் கூறினார்.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனது சேவையைப் பாராட்டி, ஜனாதிபதியினால், ஒரு விசேட நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நீதிச் சேவைகள் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
8 minute ago
18 minute ago
18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
18 minute ago
23 minute ago