2021 ஜூலை 31, சனிக்கிழமை

83ஐ திருத்தினால் சர்வஜன வாக்கெடுப்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ் 

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு உப-குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெறவி ருக்கின்றது. இந்நிலையில், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி க்கொள்வதற்கு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான தீர்மானத்தில் இந்த விவகாரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இலங்கை ஜனநாயக சோசலிசன் குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில், 83ஆம் உறுப்புரை ஏற்பாடுகளில் முரணாக இருந்தால் மட்டுமே, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

83ஆம் பிரிவின் பிரகாரம், அரசியலமைப்பில், 1ஆம், 2ஆம், 3ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம், 30(2) அல்லது 62(2) ஆம் உறுப்புரைகளில் ஏதாவது ஏற்பாடுகளை திருத்துதல் அல்லது மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் அல்லது உறுப்புரைகளுடன் முரண்படும் சட்டமூலம் ஆகியவற்றை சமர்ப்பித்தால் மட்டுமே மேற்குறிப்பிட்டவாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.  

 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம்:-

1ஆம்:- இலங்கை, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயக சோசலிசக் குடியரசாகும் என்பதோடு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என அறியப்படுத்தல் வேண்டும். 

2ஆம்:- இலங்கை குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும்.  

3ஆம்:- இலங்கைக் குடியரசில் இறைமை மக்களுக்குரியதாகவும் பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும். இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும்.  

6ஆம்:- இலங்கை குடியரசின் தேசியக் கொடி  

7ஆம்:- இலங்கையின் தேசிய கீதம் ‘ ஸ்ரீ லங்கா தாயே’ என்பதாக இருத்தல் வேண்டும்.  

8ஆம்:- இலங்கைக் குடியரசின் தேசிய தினம், பெப்ரவரி நான்காம் நாளாக இருத்தல் வேண்டும்  

9ஆம்:- பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம்.  

10ஆம்:- தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் மத சுதந்திரம்.  

11ஆம்: ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.  

30(2) குடியரசின் ஜனாதிபதி, மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அவர், ஐந்தாண்டுகள் கொண்டு ஒரு தவணைக்குப் பதவி வகித்தல் வேண்டும்.  

62(2):- நாடாளுமன்றம் முன்னதாகக் கலைக்கப்பட்டால் ஒழிய, ஒவ்வொரு நாடாளுமன்றமும் அதன் முதலாவது கூட்டத்துக்கென நியமிக்கப்பட்ட திகதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் கொண்டு காலத்துக்கு தொடர்ந்து இருத்தல் வேண்டும்.  அதற்கு மேற்பட்ட காலத்துக்கு செல்லக்கூடாது.  ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகச் செயற்படுத்தல் வேண்டும்.

ஆகியனவே 83(அ) வின் பிரகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் ஏதாவது திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் மட்டுமே, புதிய அரசியலமைப்பின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இன்றேல், வாக்கெடுப்பின் போது சமுகமளிக்காத உறுப்பினர்கள் உட்பட நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .