2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'வராத உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்’

Editorial   / 2017 ஜூன் 09 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவிவிலக வேண்டும். அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்” என, அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான தம்பிராசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிகள் இன்று அநாதரவாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களது நல் வாழ்க்கைக்கு யாரும் உதவி செய்யவில்லை.

“நாம் உதவி செய்வதாக கூறியவர்கள் ஒரு சிலருக்கு சில உதவிகளை செய்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டு அத்தோடு நிறுத்தி விட்டார்கள்.

“குறிப்பாக போராளிகளின் வேதனைகளை அறிந்த அனந்தி சசிதரனும், போராளியாக இருந்த சிவாஜிலிங்கமும் கூட அப் போராளிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இவர்களை விட அனைத்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுமே போராளிகளது வாழ்க்கைக்கு எதுவும் செய்யவில்லை.

“ஆனால், அவர்கள் மாத்திரம் பொலிஸ் பாதுகாப்புடன் சென்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையிலேயே நான்,  வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரிடமும் ஒர் கோரிக்கையை வைக்கின்றேன்.

“அதாவது மாகாண சபைகளின் உறுப்பினர்கள் அனைவரும் தமக்கு கிடைக்கின்ற வாகன கொள்வனவுக்கான பணத்தை போராளிகள் காப்பகத்துக்கு வழங்க வேண்டும். அவ்வாறு நீங்கள் வழங்கினால், நான் ஒரு வருடத்தில் இலங்கையின் அனைத்து தமிழ்ரகளிடமும் வீடு வீடாக சென்று சேர்த்து அப்பணத்தை திருப்பி தருவேன்.

“ஏனெனில் போராளிகள் மிகவும் துன்பப்பட்டுள்ளார்கள். அவர்களது நல்வாழ்க்கைக்காக நீங்கள் இதனை செய்ய வேண்டும்.

“மேலும், வடக்கு மாகாண சபையானது உருவாக்கப்பட்ட போது அதற்கு முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை மக்கள் வரலாறு காணாத வெற்றியுடன் முதலமைச்சராக்கினார்கள். காரணம் மக்கள் அவர்களது தலைவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அடையாளம் காட்டியதாலும், அவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சி.வி.விக்கினேஸ்வரன் முதலமைச்சராக அடையாளப்படுத்தப்பட்டதாலுமே ஆகும்.

“இவ்வாறான நிலையில்,  தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய, பேச வேண்டியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும், முதலமைச்சருமேயாகும்.

“இவர்கள் தவிர, வேறு யாரும் வீணாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. இவ்வாறான நிலையில் முதலமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் உரித்தான கௌரவத்தை பாதுகாப்பதாக இருந்தால் வடக்கு அமைச்சர் மீதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுடனேயே அவர்கள் தமது பதவியை விலகியிருக்க வேண்டும்.

“ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அமைச்சர்கள் பதவி விலகாது எப்படி விசாரனை குழு சுயமாக சுதந்திரமாக விசாரனை செய்திருக்க முடியும். தற்போது அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை கிடைத்துள்ளது.

“இனியாவது அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். அத்துடன் எனைய அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த உறுப்பினர்கள் விசாரனை குழிவில் சாட்சியமளிக்க செல்லாத நிலையில் அவர்கள் மீதான செயற்பாடு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

“எது எவ்வாறிருப்பினும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி விட்டு சாட்சியமளிக்க செல்லாத வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .