2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜே.வி.பி அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜமிலா நஜீமுதீன்)

 

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மூவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி காலியில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,   இன்று வியாழக்கிழமை மேல் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்திருப்பதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மூவரும் காலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டபோது, பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜீத் குமார, நளின் ஹெவகே ஆகியோர் சகிதம் தான் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாகவும், பின்னர் இது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடுநிலையாகவும் விரைவாகவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

முதலாவது முறைப்பாடு காலியில் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களை  காலிப் பொலிஸார் தாக்கியமைக்கு எதிரானது.  கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் காலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டபோது, பொலிஸ் கான்ஸ்டபிள்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியமை  தொடர்பாக இரண்டாவது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும்  விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி, அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஜனநாயகத் தேசிய முன்னணியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மக்கள் விடுதலை முன்னணியின்  உறுப்பினர்களான விஜித ஹேரத், நளின் ஹேவகே மற்றும் அஜீத் குமார ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு:-பிரதீப் தில்ருக்ஷன)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .