2021 மே 13, வியாழக்கிழமை

துமிந்த சில்வா ஆரோக்கிய மனநிலையில் இல்லை: வழக்குரைஞர்

Super User   / 2011 நவம்பர் 15 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆரோக்கியமான மனநிலையில் இல்லையென அவரின் வழக்குரைஞர் நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்ட  முல்லேரியா சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது பாரத லக்ஷ்மனின் நலன்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரான திரந்த வலலியத்த வாதாடுகையில், பாரத லக்ஷ்மனும் ஏனைய மூவரும்  கொல்லப்பட்டதில்  துமிந்த சில்வாவையும் ஏனைய மூவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) சந்தேக நபர்களாக சேர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

துமிந்த சில்வா இவ்வழக்கின் பிரதான சந்தேக நபர் எனவும்  சி.ஐ.டி.யினர் அவரை சந்தேக நபராக்காவிட்டால்  அவரை கைது செய்வதற்கு பிடிவிறாந்து பிறப்பிப்பதற்கான அதிகாரம் நீதிமன்றுக்கு உள்ளது எனவும் கூறினார்.

துமிந்த சில்வா இவ்வழக்கில் சந்தேக நபரா என நீதவான் கேட்டபோது, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பதிலளிக்கையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் துமிந்த சில்வாவை சந்தேக நபராக்குவதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் வாகனத்தை துமிந்த சில்வா மறித்தார் எனவும் அவரை சுட்டதாகவும் பாரத லக்ஷ்மனின் சாரதி சாட்சியமளித்தாலும் அச்சாட்சியதுடன் ஏனைய சாட்சிகளின் சாட்சியங்கள் பொருந்தவில்லை எனக் கூறினார். சாட்சிகள் முரண்பாடான சாட்சியங்களை வழங்கியதாக அவர் தெரிவித்தார். துமிந்த சில்வா ஆரோக்கியமான மனநிலையில் இல்லை எனவும் அவர் கூறினார்.

அப்போது,  ஆரோக்கியமற்ற மனநிலையுடைய ஒருவர் குற்றம் செய்தால் அவரை சி.ஐ.டி. கைது செய்யாதா என நீதவான் கேட்டார். அத்தகைய நபர்கள் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என உதவி பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

துமிந்த சில்வாவின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனுர மெத்தகொட வாதாடுகையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி துமிந்த சில்வா இவ்வழக்கில் ஒரு சந்தேக நபர் அல்ல எனவும் எனவே அவரை  கைது செய்யவோ கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கவோ முடியாது என்றார்.

உள்ளூராட்சித் தேர்தல் தினத்தில் நடைபெற்ற சம்பவத்தில்  பாரத லக்ஷ்மன் மாத்திரமல்லாமல்,  ஏனைய பலரும் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். உடல்நலமில்லாத தனது கட்சிக்காரர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற பின் தற்போது வெளிநாடொன்றில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வழக்கின் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுர துஷார டி மெல் சார்பில்  ஆஜரான வழக்குரைஞர் அனுஜா பிரேமரட்ன வாதாடுகையில், தனது கட்சிக்காரர் துமிந்த சில்வாவின் உத்தியோகபூர்வ மெய்ப்பாதுகாவலர் எனவும்  அவர் தற்பாதுகாப்பாக்காக செயற்பட்டிருந்தால்  அது சட்டரீதியானது என்பதால் அவரை சந்தேக நபராக சேர்க்க முடியாது எனவும் கூறினார்.

இவ்வழக்கின் இரண்டாவது மூன்றாவது சந்தேக நபர்களான ஜி.எம்.கே.பந்துலசேன மறறும் ஜி.எம்.கே. ருவன் மதுசங்க சார்பில் ஆஜரான  வழக்குரைஞர் இனோகா கமகே வாதாடுகையில் , தனது கட்சிக்கார்கள் ஏனைய சந்தேக நபர்களுக்கு வீடொன்றை வாடகைக்கு வழங்கியிருந்ததால் இவ்வழக்கில் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.  கொலையுடன் தனது கட்சிக்காரர்களுக்கு தொடர்பில்லை எனவும்  சந்தேக நபர்கள்சிலருக்கு புகலிடம் அளித்ததில் சந்தேக நபராக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாதங்களை கருத்திற் கொண்ட நீதவான், சி.ஐ.டி.யின் 'பி' அறிக்கை மற்றும் சாந்த பெரேரா அமரதேவ மற்றும் நிஹால் குமார பிராங்க் விஜேசேகர ஆகியோரின் சாட்சியளின்படி துமிந்த சில்வா இவ்வழக்கில் ஒரு சந்தேக நபராக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், எனினும் சி.ஐ.டியினரை அவரை ஒரு சந்தேக நபராக்காததால் கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பிக்க முடியாது என்றார்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்குரிய நடைமுறைகளை பின்பற்றி  அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முதலாவது சந்தேக நபரான அனுர துஷார டி மெல்லை நவம்பர் 29 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 2 ஆம் 3 ஆம் சந்தேக நபர்கள் 50,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


  Comments - 0

 • Dilan Thursday, 17 November 2011 12:18 AM

  குதிரையை ஓடவிட்டுவிட்டு குதிரை லாயத்தை மூடிய கதை.

  Reply : 0       0

  vaasahan Thursday, 17 November 2011 12:32 AM

  Dilan, அற்புதமான உவமை.

  Reply : 0       0

  fazal Saturday, 19 November 2011 10:26 PM

  ssshhh!!!
  அவர் மீண்டும் வரலாம். முக்கிய அமைச்சர் ஆகலாம். எதுக்கும் பக்கம் பார்த்து பேசுங்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .