2021 மே 13, வியாழக்கிழமை

டில்லிக் கலவரம்: ஒரு ‘கறுப்பு அத்தியாயம்’

எம். காசிநாதன்   / 2020 மார்ச் 02 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிமைமிக்க இந்திய ஜனநாயகம், ‘டெல்லிக் கலவரம்’ போன்றவற்றைச் சமாளித்து, தன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கது.  

என்றாலும், அதே ஜனநாயக ரீதியிலான தேர்தலில் வெற்றி பெற்று வந்தவர்கள், ‘வெறுப்புப் பேச்சுகளை’ விதைத்து, இப்படியொரு சூழலை உருவாக்கியிருப்பது, அசாதாரணமான நிகழ்வாகவே தோற்றமளிக்கிறது.   

குறிப்பாக, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட போதும், அயோத்தி வழக்குத் தீர்ப்பு வந்தபோதும் அமைதி காத்த மக்கள், இப்போது குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் களமிறங்கி, உலக அரங்கில் இந்தியாவின் மாண்புமிக்க ஜனநாயகத்தைக் களங்கப்படுத்த நினைப்பது கவலைக்குரியது.   

இந்திய அரசமைப்பு, ‘குடியுரிமை’ பற்றித் தெளிவாகக் கூறுகிறது. அதில், எந்த இடத்திலும் மத அடிப்படையில் குடியுரிமை வழங்க இடம் அளிக்கப்படவில்லை. 1955ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டம், அப்படியொரு வாய்ப்புக்கு வழி அமைத்துக் கொடுக்கவில்லை.   

ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகிய மூன்றையும் இணைந்து, ஒரே நேரத்தில் பேசப்படுவதால் வந்துள்ள பிரச்சினையே, இப்போது நாடெங்கும் போராட்டக் களத்தை ஏற்படுத்தி விட்டது.  

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வந்த நேரத்தில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கல்ராஜ் மிஸ்ரா, பேரணி நடத்தியதும், அவரின் வெறுப்புப் பேச்சுகளுமே இத்தகைய கலவரத்துக்கு வித்திட்டிருந்தது. இதை, டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த முரளிதர், “வெறுப்புப் பேச்சு’களுக்குக் காரணமானவர்கள் மீது, ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை” என்ற கேள்வியிலேயே காண முடிகிறது.   

நீதிபதி முரளிதர், உடனடியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட அறிவித்தல், சர்ச்சைகளுக்கு மேலும் தீனி போட்டு விட்டது. “பா.ஜ.கவினர் மீது, ‘எப்.ஐ. ஆர்’ ஏன் போடவில்லை” என்று கேள்வி கேட்ட நீதிபதியை, மாற்றுவதா என்ற கேள்விகளை, எதிர்க்கட்சியினர் முன் வைக்கிறார்கள்.   

ஆனால், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தோ, “முறைப்படி, அந்த நீதிபதியின் கருத்தைக் கேட்டு, ஏற்கெனவே எடுக்கப்பட்ட இடமாற்ற முடிவை அரசியலாக்குவதா” என்று காட்டமாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

நீதிபதி எழுப்பிய கேள்வியின்படி, “இப்போது வழக்குப் போடுவது உகந்ததல்ல” என்று வேறு​றோர் அமர்வில், டெல்லி பொலிஸார் கூறியிருப்பதை, நியாயமான வாதம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், வெறுப்புப் பேச்சுகளைப் பேசியதாகக் கூறப்படும் கல்ராஜ் மிஸ்ரா போன்றவர்கள், பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள். கல்ராஜ் மிஸ்ரா மீது, இப்போது வழக்குப் போடுவது, ‘அமைதி திரும்பியுள்ள டெல்லியில் புதிய தீயைப் பரவ விடும்’ என்று பொலிஸார் கருதுவதில் தவறு காண முடியாது.  

அதேநேரத்தில், ஆம் ஆத்மி உறுப்பினர் மீது மட்டும், இந்தக் கலவரத்தை முன்னிட்டு, ‘எப்.ஐ.ஆர்’ போடுவது, டெல்லிப் பொலிஸார் முன்வைத்த வாதத்தை நிராகரிக்கிறது.   

ஆகவே, டெல்லிக் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான கே.எம்.ஜோசப், “டெல்லிப் பொலிஸார் சட்டத்தின் அடிப்படையில் தமது கடமையைச் செய்திருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டியது முக்கியத்துவம் பெறுகிறது.   

அரசியல் வாதிகள், ஆட்சியிலிருப்பவர்களோ, எதிர்வரிசையில் இருப்பவர்களோ அரசியல் செய்யலாம்; விமர்சனத்துக்கு உள்ளாகலாம். ஆனால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய அமைப்புகள், அரசியல் மயமாவது இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்க்காது.   

இதுபோன்ற அமைப்புகள், அரசியல்மயமாவது சகஜமானதுதான்; என்றாலும், இப்போது அதன் தன்மை அதிகமாகி இருக்கிறது என்ற உண்மையை ‘டெல்லிக் கலவரம்’ வெளிப்படுத்தத் தவறவில்லை.   

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான பேரணிகள், முற்றுகைப் போராட்டங்களைத் தடுத்து, அவற்றை முடிவுக்கு கொண்டு வரவில்லை. ஆதரவுப் போராட்டங்களையும் அது தொடர்பான வெறுப்புப் பேச்சுகளையும் உடனுக்குடன் தடுத்திட முன்வரவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் வௌிக்கிளம்பியுள்ளன.   

அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து, பொலிஸாரை விடுவிக்க, ‘பிரகாஷ் சிங்’ வழக்கில் உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து, அவற்றைச் செயற்படுத்தினாலும், பொலிஸாரின் செயற்பாடு, டெல்லிக் கலவரத்தின் போது குறைபாட்டுக்கும் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகி இருப்பது துரதிர்ஷ்டவசமானது.  

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் சில வன்முறைப் போராட்டங்களாக மாறினாலும், பெரும்பாலான இடங்களில் அமைதிப் போராட்டங்களாகவே நடைபெற்றன. ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டிய கட்சிகள், அந்தப் போராட்டங்களுக்கு  எதிர்ப் போராட்டங்களை நடத்த எத்தனித்த இடங்களில்தான், வன்முறைகள்  இடம்பெற்றிருந்தன.    

1984இல் ஏற்பட்ட ‘சீக்கியர் கலவரம்’ டெல்லிக்கு அழியாத ‘கறுப்பு மை’யைப் பூசியிருக்கிறது என்றால், இப்போதைய குடியுரிமைச் சட்ட ஆதரவுப் போராட்டத்தால் ஏற்பட்ட கலவரம், ‘கறுப்பு அத்தியாயமாக’ மாறியிருக்கிறது.   

பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனடியாகக் களமிறங்கி, அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்தார்கள்; அதில் வெற்றியும் கண்டிருந்தார்கள். இது ஒருபுறமிருந்தாலும், 38 பேருக்கு மேல் பலியாகி இருப்பது, அதுவும் தலைநகர் டெல்லியில் இது மாதிரி நடந்திருப்பதை, மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள், அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.  

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட நேரத்தில், பாரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மஹபூப் ஆகியோர் கைது செய்யப்பட்டு, இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், நிலைமைகள் கட்டுக்குள் இருக்கின்றன. அதையெல்லாம் விட, நாடு முழுவதும் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிய, ‘அயோத்தி வழக்கு’த் தீர்ப்பு, அமைதியாக் கடந்துவிட்டது.   

இந்துக்களும் இஸ்லாமியர்களும் தங்களின் ஒற்றுமை பிரிக்க முடியாதது என்று, உலகுக்கு உணர்த்தும் வகையில், உச்சநீதிமன்றம் அளித்த அந்தத் தீர்ப்பு அமைந்தமை, இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ‘மத அடிப்படையில் குடியுரிமை’ என்ற ஒரு சட்டத்தால், இன்றைக்கு நாடே போராட்டக் களமாக மாறி வருவது வேதனைக்குரியது.  

இந்தத் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் குறித்து, மக்களிடையே போதிய விழிப்புணர்வை மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சி, முன் கூட்டியே ஏற்படுத்தத் தவறி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.   

அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது, அனைத்துத் தரப்பு மக்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு நடைமுறை. அதற்கு ‘என்.பி.ஆர்’ (தேசிய மக்கள் தொகைப் பதிவேடு) என்று, புதிய வார்த்தைப் பிரயோகத்தைச் செய்து, இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுமே அந்த ‘என்.பி.ஆர்’ எடுப்பதற்கு விநியோகிக்கப்பட்ட புதிய படிவம் குறித்து, அச்சத்துக்கு உள்ளாகி உள்ளார்கள்.  

பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், “2010இல் வெளிவந்த பழைய படிவத்தில்தான், பீஹார் மாநிலத்தில் ‘என்.பி.ஆர்’ எடுக்கப்படும்” என்று, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதில் இருந்தே, இந்த ‘என்.பி.ஆர்’ புதிய படிவம் குறித்து, அனைத்துத் தரப்பு மக்களும் வெளிப்படுத்திய அச்சம், உண்மை என்று நிரூபணம் ஆகிறது.   

அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ‘தேசியக் குடியுரிமைப் பதிவேடு’ காரணமாக, 19 இலட்சம் பேர் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளார்கள்; இதில் இந்துக்களும் உள்ளார்கள்; இஸ்லாமியர்களும் உள்ளார்கள்.   

ஆகவே, “தேசியக் குடியுரிமை பதிவேட்டால் ஓர் இந்தியருக்குக் கூடப் பாதிப்பு வராது” என்ற மத்திய அரசின் வாதத்தை, மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, நாடு முழுவதும் புதிய படிவத்தில் ‘என்.பி.ஆர்’, புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவை குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கும் விதத்திலேயே, தற்போதைய போராட்டங்களும் டெல்லிக் கலவரமும் அமைந்து விட்டன.   

விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, “குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு” என்று, ஆங்காங்கே நடத்தப்பட்ட போராட்டங்களில் எழுந்த ‘வெறுப்புப் பேச்சுகள்’, ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்தவற்றை நெருப்பாக்கி விட்டன.  

இந்நிலையில், டெல்லிக் கலவரம் முடிவுக்கு வந்து, தலைநகரில் அமைதி திரும்பியிருக்கிறது என்பதும், கலவரம் குறித்து விசாரிக்க, இரு சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் நல்ல செய்தி.   

நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலே நேரடியாகக் களமிறங்கி, வடகிழக்கு டெல்லிப் பகுதிகளில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தது, அங்கே அமைதி திரும்பியிருப்பது, இந்திய ஜனநாயகம், இது போன்ற ‘உராய்வுகளை’ தூக்கியெறிந்து விட்டு, கம்பீரமாக நடை போடும் என்பதற்கு அடையாளம்.  

இந்த அடையாளம், ‘என்ன விலை கொடுத்தேனும்’ அரசமைப்புச் சார்ந்த அமைப்புகளாலும் ஆட்சியில் இருப்பவர்களாலும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே, இன்றைக்கு நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .