2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

லண்டன் செல்வதற்கு அஞ்சுகிறாரா ஜனாதிபதி?

Super User   / 2010 நவம்பர் 09 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-கே.சஞ்சயன்

பிரித்தானியாவின் 'ஒக்ஸ்போர்ட் யூனியன் சொசைற்றி'யில் உரையாற்றுவதற்காக இந்தமாத இறுதியில் லண்டன் செல்லவிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. ஆனால் அவர் தனது பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போர்க்குற்றச்சாட்டுகளின் பேரின் லண்டனில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினாலேயே, இந்தப் பயணத்தை அவர் ரத்துச் செய்திருப்பதாக வெளியான செய்திகள் தான் இந்தப் பரபரப்புக்கான காரணம்.

இந்தியாவின் 'ரைம்ஸ் ஒவ் இந்தியா' ஊடகம் தான் முதலில் இந்த விவகாரத்தைக் கிளப்பி விட்டது. இப்போது இது சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் முக்கிய செய்தியாகி விட்டது. இது இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லண்டன் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், அவர் மீது போர்க்குற்ற வழக்கு ஒன்றை அங்குள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக உலகத் தமிழர் பேரவை கூறியிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் லண்டனுக்கான பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திடீரெனக் கைவிட, அவர் அச்சத்தின் பேரில் தான் பயணத்தைக் கைவிடுகிறாரா என்ற கேள்வி பலமாக எழுந்து விட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ லண்டனுக்கான பயணத்தை நிறுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் அச்சத்தினால் தான் செய்திகளை வெளியிட, வெளிவிவகார அமைச்சு விழுந்தடித்துக் கொண்டு மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மைய நாட்களில் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்ததாலும், விரைவில் இரண்டாவது பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாலும் தான் பயணம் இடைநிறுத்தப்பட்டது. டிசம்பர் வரை இந்தப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதே தவிர ரத்துச் செய்யப்படவில்லை' என்று விளக்கமளித்துள்ளது வெளிவிவகார அமைச்சு.

ஜனாதிபதிக்கு வேலைச்சுமை அதிகமாக இருப்பதால் தான் இந்தப் பயணத்திட்ட மாற்றம் என்பதே அதன் வாதம்.

என்னதான், வெளிவிவகார அமைச்சு இப்படி விளக்கம் கொடுத்திருந்தாலும், இதை பலர் நம்ப மறுக்கிறார்கள் என்பது உண்மை.

சர்வதேச ரீதியாக இடம்பெறும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவோ அல்லது அதில் சம்பந்தப்பட்டுள்ள எவரையும் கைது செய்து விசாரிக்கவோ பிரித்தானியாவின் சட்டத்தில் இடமுள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு உலகத் தமிழர் பேரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது வன்னியில் இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக எச்சரித்திருந்தது. இதுதான் இப்போது இலங்கை அரசுக்கு நெருடிக்கடியை ஏற்படுத்தியுள்ள விவகாரம்.

சர்வதேச அளவில் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் தொடர்பான நெருக்கடியை எதிர்கொண்டே வருகிறது. இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பது அதற்குப் பெரும் பிரச்சினையாக உள்ளது.

ஐ.நா. பொதுச்செயலர் நியமித்துள்ள நிபுணர்கள் குழு ஒரு பக்கத்தில் இலங்கை அரசுக்கு நெருக்கடியாக இருந்து வருகிறது. ஆனாலும், அதை இராஜதந்திர ரீதியாக அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

இதுபோல பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டிருந்த நெருடிக்கடிகளைச் சமாளிப்பதில் ஓரளவுக்கேனும் இலங்கை அரசு வெற்றி பெற்றிருந்ததை மறுக்க முடியாது.

இப்படி போடப்பட்ட பந்துகளையெல்லாம் சமாளித்து வந்த அரசுக்கு, பிரித்தானிய விவகாரம் ஒரு சறுக்கலாகவே அமைந்துள்ளது போலத் தெரிகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த மாத இறுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் அரசு முறையிலான உத்தியோகபூர்வ பயணம் அல்ல. தனிப்பட்ட பயணமே.

அவர் லண்டன் செல்லும் போது பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் அவருக்கு எதிரான வழக்குத் தொடுக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது எந்தளவுக்குச் சாத்தியம் என்பதை அத்தகைய வழக்குத் தொடுக்கப்பட்ட பின்னரே தெரியவரும். அதற்கு முன்னர் அதை யாரும் தீர்மானிக்க முடியாது.

பிரித்தானியாவில் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணமாகச் சென்றிருக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டால் அது சர்வதேச இராஜதந்திர முறைமைக்கு முரணானதாக அமையும்.

ஆனால், தனிப்பட்ட பயணமாக அவர் செல்லும் போது இந்த நெருக்கடியில் பிரித்தானியா சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் இல்லை.ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைப் பொறுத்தவரையில் அது பாதுகாப்பானதாக இருக்க முடியாது.

இதைவிட இன்னொரு சிக்கலும் உள்ளது.

பிரித்தானிய அரசுக்கும் இலங்கைக்கும் இடையில் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விடயத்தில் அவ்வளவாக ஒருமித்த கருத்துக் கிடையாது.

இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது தொடர்பாக கண்டறிந்து கொள்வதற்கு சர்வதேச விசாரணை அவசியம் என்ற கருத்தை அண்மையில் கூட பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் வெளியிட்டிருந்தார்.

இலங்கை அரசோ அப்படியான எந்தப் போர்க்குற்றங்களும் நடக்கவில்லை என்கிறது. ஆனால், பிரித்தானியாவோ அதை நீங்கள் சொல்லத் தேவையில்லை, சர்வதேச விசாரணைக் குழுவை நியமித்து கண்டுபிடிக்க வேண்டும் என்கிறது.

இந்தப் பிணக்க நிலையானது இரு நாடுகளுக்கும் இடையில் இந்த விடயத்தில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

எம் மீது போர்க்குற்றம் சாட்ட பிரித்தானியாவுக்கு என்ன யோக்கியம் இருக்கிறது? என்று பதிலுக்கு கேள்வி கேட்டது  இலங்கை.

கடந்த காலங்களில் ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பிரித்தானியாவும் பொறுப்புத் தானே என்று கேள்வி கேட்டது.

இந்த சுமுகமற்ற சூழலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானியா செல்வது நெருடிக்கடியைக் கொடுக்கக் கூடியதென்ற கருத்தே நிலவுகிறது.

இதன் காரணமாக பிரித்தானிய அரசாங்கமே கூட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வருகை நெருக்கடியைக் கொடுக்கக் கூடியதென்று எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.

ஏனென்றால் ஏற்கனவே சிலியின் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசே 1998 ஆம் ஆண்டில் லண்டன் சென்றிருந்த போது ஸ்கொட்லன்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுத் தொடர்பாக பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடரப்பட்டதன் விளைவாகவே அவர் கைது செய்யப்பட்டார்.

அதுபோல பலஸ்தீனர்கள் சட்ட ரீதியாக போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப் போவதாக எச்சரித்ததை அடுத்து இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் சரோன் 2005ஆம் ஆண்டு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து திரும்பிப் போனார்.

பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயரின் அழைப்பின் பேரில் தான் அவர் லண்டன் சென்றார். ஆனால் அங்கு கைது செய்யப்படும் நிலை இருப்பதாக பிரித்தானிய அரசு எச்சரிக்க- வந்த வழியிலேயே திரும்பிச் சென்றார்.

இதேபோன்ற நெருக்கடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் இலங்கையும் சரி, பிரித்தானியாவும் சரி, அக்கறையோடு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனென்றால் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்தால் அது சர்வதேச அளவில் நெடிக்கடிகளைக் கொடுக்கும்.

குறிப்பாக பிரித்தானியாவுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கடுமையான அழுத்தங்களைக்  கொடுக்கத் தயங்காது. அது வேண்டப்படாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய பயணத் திட்டத்தை பிரித்தானியா கூட பிற்போடுமாறு ஆலோசனை கூறியிருக்கலாம்.

எது எவ்வாறாயினும், யாருடைய ஆலோசனையின் பேரில் இந்தப் பயணம் இப்போதைக்கு ரத்துச் செய்யப்பட்டிருந்தாலும், இலங்கை அரசு மீதான நெருக்கடி நீங்கி விடவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானியாவுக்குள் காலடி எடுத்து வைக்க முடியுமா- இல்லையா என்பது தான் இப்போது பலரிடமும் உள்ள முக்கியமான கேள்வி.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ டிசம்பரில் அங்கு செல்வார் என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சு என்ன திகதியில் அவர் அங்கு செல்வார் என்று கூறவில்லை.

என்ன தான் சமாதானம் சொன்னாலும், லண்டனுக்கான  பயணத் திகதி தீர்மானிக்கப்பட்டு அவர் அங்கு சென்று திரும்பும் வரைக்கும், அச்சத்தின் காரணமாக இந்தப் பயணம் தள்ளிப் போடப்பட்டதாகவே கருதப்படும். உண்மை எதுவாயினும் இப்போது இலங்கை அரசுக்கு இது சோதனையானதொரு விவகாரம் தான்.

உலகத் தமிழர் பேரவை எடுத்த முயற்சிகளால் இந்த நெருடிக்கடி ஏற்பட்டதா அல்லது இலங்கை அரசு பிள்ளையார் பிடிக்க அது குரங்காகிப் போனதா என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு முறை லண்டன் சென்று திரும்பிய பின்னர் தான் தீர்மானிக்க முடியும்.


  Comments - 0

 • Thilak Tuesday, 09 November 2010 09:56 PM

  சிறந்த நடுநிலையான கட்டுரை இது.

  Reply : 0       0

  jeyarajah Wednesday, 10 November 2010 07:14 PM

  எங்கள் துட்டகைமுனு உதற்கெல்லாம் பயந்தவர் இல்லை. .எப்படியாவது சுழி ஓடி வருவார் அல்லது on line யில் ஆவது பேசுவார் அவருடன் இருக்கவே இருக்கிறார் களனிக் காத்தவராயன்.பப்பா மரத்தில் இப்போது ஏறியே நிற்கிறார்.கயிறுடன் வருவார்,காத்திருந்து பாருங்கள்.

  Reply : 0       0

  xlntgson Wednesday, 10 November 2010 08:38 PM

  இச்சட்ட முறைமையின் கீழ் இதுவரை எவரும் கைதாகவில்லை. முறைப்பாட்டொன்றின் பேரில் வெளிநாட்டில் நடந்த ஒரு மனிதக்கொலை அல்லது கொலைகளுக்காக கைது செய்யவேண்டும் என்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இஸ்ரேலிய முன்னாள் வெளிநாட்டுஅமைச்சர் இன்னும் பிடிபடவில்லை. இவ்வாறான செய்திகளைப்பரப்பியே அவர்களை இங்கிலாந்துக்கு வரவிடாமல் செய்வதே நோக்கமாக இருக்கலாம். இந்த சட்டம் கூடிய விரைவில் ரத்து செய்யப்பட்டுவிடும். இன்னமும் உலகை ஆள்வதாக பிரிட்டனுக்கு எண்ணம் போலும். சூரியன் அஸ்தமித்து விட்டது, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியதும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .