Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தன் தவம்
தியாகி திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் அரசின் ,நீதிமன்றங்களின், படைகளின் தடைகள், அடக்கு முறைகள், அடாவடிகள் எதுவுமின்றி அண்மையில் நடந்து முடிந்துள்ளது.
இம்முறை இவ்வாறாக அரச தரப்புக்களின் அடக்கு முறைகள் அடாவடிகள் இல்லாதபோதும் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அடாவடிகள், அடக்கு முறைகளுடன் நடந்து முடிந்துள்ளதுதான் தமிழ் மக்களை விசனப்படுத்தியுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்கள், கண்டனங்கள், கவலைகள், விமர்சனங்கள் தணிவதற்குள் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியமை இவ்வாறு விரட்டுபவர்களின் அரசியல் நாகரிகத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அரசியல் அடாவடித்தனத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.
தமிழரின் போராட்ட வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறான போராளிகளில் அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கையிலேந்தி, காந்திய வழியில் தமிழ் மக்களின் விடிவிற்காய் காந்திய தேசமான இந்தியத் தேசத்திற்கு எதிராக நீரின்றி, உணவின்றி பட்டினியால் உயிர் துறந்த ஒருவர் தான் தியாகி திலீபன்.
1987இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் வடக்கு,கிழக்கில் கால்பதித்தது. தன்னினம் பகைவனால் அழிக்கப்பட்டு, இந்திய வல்லாதிக்க அரசின் கூட்டுச்சதிக்கு இலக்காகி சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்ட திலீபன் தான் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடியலுக்காக மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையான உண்ணா விரதம் என்ற அகிம்சை வழி ஆயுதத்தைக் கையில் எடுத்து அகிம்சையின் தாய் வீடான
இந்தியத் தேசத்திடமே 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத அறப்போரைத் தொடுத்தார்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி நல்லைக் கந்தனின் முன்றிலிலே மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும்,
அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும், தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்து தனது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை திலீபன் ஆரம்பித்தார்.
திலீபனின் உண்ணாவிரத நாட்கள் கடந்தோடிய போதும், அந்தக் கோரிக்கைகள் எதுவும் காந்தி தேசத்தினால் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை அன்று, தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள், சரியாகக் காலை 10.48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் தமிழர் தேசம் மற்றும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில்தான், தமிழர் தேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமான திலீபனை தமது தனியுரிமையாக, தனிச் சொத்தாகச் சொந்தம் கொண்டாடி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்து வந்த அரசியல் இம்முறை தமிழ் மக்களினது கடும் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
வழக்கம் போலவே, இம்முறையும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஆரம்பமாகின. இதனையடுத்து தினமும் பெருமளவிலான மக்கள், மதத் தலைவர்கள்,அரசியல்
கட்சியினர் என வேறுபாடின்றி சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதில் கடந்த 17ஆம் திகதி மாலை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றனர்.
இதன்போது, அங்கிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டுள்ளனர். அமைச்சரையும் அவரது குழுவினரையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.
தமிழ்த் தேசத்திற்காக, தமிழ் மக்களுக்காகா உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் அடங்கிய குழுவினரை அதிலும் அவர்கள் தமிழர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களை அஞ்சலி செலுத்த விடாது தடுக்க,திருப்பியனுப்ப தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு என்ன உரிமையுள்ளதென்பதே இன்று தமிழர் தேசத்தில் எழுந்துள்ள கேள்வி.
திலீபன் அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானவனாக இருக்கையில் திலீபனை உரிமை கொண்டாடத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யார்? இவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்? இவர்களுக்கும் திலீபனுக்கும் என்ன தொடர்பு? திலீபனுக்கு அஞ்சலி செலுத்த யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதனை தீர்மானிக்க இவர்கள் யார்?என்பதே தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே நல்லூரில் திலீபன் நினைவுத்தூபியை நிர்மாணித்துப் பராமரித்தவர்கள்.
ஆனால், வீட்டிற்குள் ஒட்டகம் புகுந்து போல் புகுந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று அங்குள்ளவர்களை எல்லாம் விரட்டிவிட்டு திலீபனின் நினைவுத்தூபி இடத்தை சர்வாதிகாரமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசத்தை மீட்க வந்தவர்கள் போல, காட்டி அரசியல் செய்கின்றனர். இதுதான் இன்று தமிழ் மக்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது விசனமும் வெறுப்பும் கொள்ள வைத்துள்ளது.
அமைச்சரும் அவரது குழுவினரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது தடுக்கப்பட்டமை மிகவும் மோசமான செயல். ஏனெனில், தியாகி திலீபன் நினைவிடம் என்பது ஒரு பொது இடம் அங்கு எதிரிகளுக்குக் கூட நினைவேந்தல் செய்ய உரிமை உண்டு. இந்த உரிமையைத் தடுப்பதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எந்த உரிமையும் இல்லை.
அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகி திலீபனது நினைவேந்தல் களம் அல்ல.தியாகி திலீபனின் நினைவிடத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சர்வாதிகாரமாக தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதனால் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள்கூட திலீபனுக்கு அஞ்சலி செலுத்த அங்கு சென்றால் தாமும் அவமானப்படுத்தப்படுவோம் ,
திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சம் காரணமாக செல்லத் தயங்குகின்றனர்.எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவார்கள் என்றவாறாக, மக்கள் தமது விசனத்தை வெளிப்படுத்துகின்றனர்.
யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம். அதுதான் மனித மாண்பு. திலீபன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் கூட திலீபனின் தியாகத்தை மதித்து இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். ஒரு மாவீரனின் தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை.
தமிழ் மக்களின் இனமான உணர்வுகளை, போராளிகளின் தூய்மையான போராட்டத்தை அறியாதவரல்ல அமைச்சர் சந்திரசேகர், திலீபன் போன்ற தமிழ்த் தேசிய இனத்தின் உயர்ந்த நோக்கத்திற்காகத் தமிழ் மக்களுக்காகத் தன்னுயிரை ஆகுதியாக்கியவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அவரை அஞ்சலி செலுத்த விடாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முட்டாள்கள் போன்று செயற்பட்டுள்ளனர்.
அமைச்சர் அரசியல் நோக்கில் அங்கு வந்திருந்தால் கூட அதுபற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இவர்களும் தமிழ்த் தேசிய அரசியல் ஆதாயத்திற்காகத்தான் தியாக தீபம் திலீபனை உரிமை கொண்டாடுகின்றனர்.
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த நினைவிடத்திற்கு வந்த போதும் இதேபோன்றே செம்மணி மனித புதைகுழிப்பகுதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதும் அமைச்சர் சந்திரசேகரும் அவரது எம்.பி.க்கள் குழுவினரும் விரட்டப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விரட்டியவர்கள் இதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன? . செம்மணிக்கு வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி செம்மணிக்கு வரவில்லையென ஒப்பாரி வைக்கின்றனர்.
ஜனாதிபதி இனவாதி என்கின்றனர் .இது மிகவும் இழிநிலையான அரசியல் .
திலீபன் நினைவேந்தல் விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. திலீபனின் நினைவேந்தலை பொறுத்த வரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திலீபனை உரிமை கொண்டாடி அசிங்க அரசியல்.அடாவடி அரசியல் செய்கின்றனர். என்பதே உண்மை.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago