2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

அடக்குமுறைச் சிந்தனைகள்

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 21 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே. அஷோக்பரன்

இலங்கையர்களின் ‘ட்விட்டர்’ சமூக வலைத்தளப் பகுதியில், இலங்கையின் பிரபல ஊடக நிறுவனமொன்றின் பணிப்பாளரான, அரசியல் பின்புலத்திலிருந்து வந்த பெண்மணி ஒருவர், அண்மையில்  கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர், முன்னொருபொழுது வழங்கியிருந்த பேட்டியொன்றும் பெண் தலைமைத்துவ விருது வழங்கல் நிகழ்வொன்றில் ஆற்றியிருந்த உரையொன்றும், மீண்டும் ‘ட்விட்டர்’ தளத்தில் பகிரப்பட்டதே, அவர் விமர்சனங்களைச் சந்திக்கக் காரணமாயிற்று. 

அந்த விருது வழங்கும் விழாவில், அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், இங்கு கவனமீர்ப்பதாக அமைகிறது. அந்த உரையின் இரத்தினச் சுருக்கம், தன்னிடம் அதிகாரம் வந்தால், தான் ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் போர்க்கால அறையொன்றை அமைத்து, தணிக்கை செய்வேன் எனும் தொனியில் அமைந்திருந்தது. அவருக்கெதிரான விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதற்கு இந்தக் கருத்து முக்கிய காரணமாகியது. 

சில விமர்சகர்கள், இந்தப் பெண்மணியை ஹிட்லரின் பிரசாரப் பீரங்கியான கோயபெல்ஸூடன் ஒப்பிடவும் செய்தார்கள். அதன் பொருத்தப்பாடுகள் எவ்வாறு இருப்பினும், இந்த ஒப்பீட்டுக்கான காரணம், ‘தணிக்கை’ எனும் இரும்புக்கரத்தைக் கொண்டு, அடக்குமுறையைப் பயன்படுத்தி ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பேச்சுரிமை, கருத்து வௌிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றை மீறிச்செயற்பட்டு, அதனூடாகத் தமது கருத்துகளை மட்டும் பிரசாரம் செய்தல் போன்ற எண்ணங்களை, குறித்த பெண்மணி வௌிப்படுத்தியதாக இருக்கலாம். 

சுதந்திரத்துக்கான மனிதனின் வேட்கை என்பது, குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. 1320இன் ஸ்கொட்லாந்தின் சுதந்திர பிரகடனமான ‘ஆப்ரோத்’ அறிவிப்பில், “நாம் போராடுவது புகழுக்காகவோ, செல்வத்துக்காகவோ, மதிப்புக்காகவோ அல்ல. நாம் எந்த நல்ல மனிதனும் விட்டுக்கொடுக்காத, அதற்கான தன் உயிரையும் விடத்துணியும் சுதந்திரத்துக்காக மட்டுமே போராடுகிறோம்” என்று வௌிப்பட்டிருந்த வார்தைகள் சுதந்திரத்துக்கான மனிதனின் வேட்கையை எடுத்துக்காட்டும் சிறந்த உதாரணங்களுள் ஒன்றாகும். உரிமைகளும் சுதந்திரமும் அடக்கப்படும் போது, அதை பெற்றுக்கொள்ள மனிதன் தன் உயிரையும் பணயம் வைக்கத்தயங்கியதில்லை என்பதற்கு உலக வரலாறே சாட்சி. அதனால்தான், உலக வரலாற்றில் வல்லாட்சிகள் நீடித்து நிலைத்ததில்லை. 

“மனிதனின் இருப்பை உறுதிப்படுத்துவதே, அவனது சிந்தனைதான் என்பது மேற்குலகின் தத்துவ அடிப்படைகளில் ஒன்று” என்பார் பிரெஞ்சுத் தத்துவவியலாளரான ரெனே டெய்காட். ஆகவே, சிந்தனை என்பது மனிதனின் இருப்பின் அடிப்படைகளில் ஒன்று! அதனால்தான், சிந்தனைக்கான சுதந்திரம் என்பது, மனித இருப்பின் அடிப்படை. சிந்தனையின் தொடர்ச்சிதான், அதன் வௌிப்பாடு. ஆகவே தான், மனித உரிமைகளின் அடிப்படையானதாக பேச்சுரிமை அதாவது, சிந்தனைகளின் வௌிப்பாட்டுரிமை அமைகிறது.

பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, வௌியான மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரகடனத்தில், பேச்சுரிமையின் முக்கியத்துவம், “கருத்துகள் மற்றும் அபிப்பிராயங்களின் கட்டற்ற தொடர்பாடல் என்பது மனிதனின் உரிமைகளில் கட்டற்ற பொக்கிஷமாகும்”என்ற வார்த்தைகளின் ஊடாக அங்கிகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அது பேச்சுரிமைக்கான சட்டரீதியிலான மட்டுப்பாடுகள் உருவாக்கப்பட முடியும் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. 

ஆனால், இதன் பின்னர் அடுத்த சில வருடங்களில் பிறந்த அமெரிக்க அரசியலமைப்புக்கான முதலாவது திருத்தம் பேச்சுரிமை, ஊடக உரிமை, ஒன்றுகூடலுக்கான உரிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டமியற்றமுடியாத மட்டுப்பாட்டை அமெரிக்க கொங்கிரஸுக்கு ஏற்படுத்தும் அளவுக்குப் பேச்சுரிமையின் முக்கியத்துவத்தை அங்கிகரித்திருந்தது. எவரும் தாம் விரும்பிய சிந்தனைகளைக் கொண்டிருக்கவும் அதனைப் பேசவும் அச்சிடவும் பிரசாரம் செய்வதற்குமான உரிமை அங்கிகரிக்கப்பட்டமை, மனித வரலாற்றின் பெரும் திருப்புமுனை. 

அமெரிக்காவைப் போன்ற பரந்த பேச்சுரிமைக்கான அங்கிகாரம் பல்வேறு நாடுகளுக்கும் உவப்பானதாக அமையவில்லை. காரணம், பல்வேறு நாடுகளுக்கும் வேறு முக்கிய நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன. அதில் முக்கியமானது மதம். மதச்சார்புடைய நாடுகள், தமது மதங்களைப் பாதுகாக்கத் தலைப்பட்டன. அதற்காக பேச்சுரிமையை மட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. மேலும் முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, கம்யூனிஸ வல்லாட்சி உடைய நாடுகள், தம்முடைய அதிகாரத்தைப் பாதுகாக்க, பேச்சுரிமையை மட்டுப்படுத்தின. இந்த நிலைமை இன்றும் தொடர்கிறது. 

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பது, கடும் விளைவுகளைக் கொண்டதாக அமையும். ஆட்சியாளர்களை மீறி, எந்தவொரு தகவலும் கூட மக்களைச் சென்றடைய முடியாத நிலை அங்கு நிலவுகிறது. சிங்கப்பூரில் கூட, பேச்சு சுதந்திரம் என்பது பெரும் மட்டுப்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கிறது. இதன் விளைவுதான் சிங்கப்பூரை சுதந்திரகாலம் முதல் ஒரே கட்சி ஆண்டு வருகிறது. 

இந்தப் பின்புலத்தில்தான் இலங்கையில், குறிப்பாக அதிகார பரப்பில் உள்ளவர்களிடம் உருவாகியுள்ள தணிக்கை மீதான பற்று, இலங்கையர்களின் பேச்சுரிமையையும் வௌிப்பாட்டு உரிமையையும் கட்டுப்படுத்துவதில் கொண்டுள்ள ஈர்ப்பு, தகவலறியும் மக்களின் உரிமை ஆகியவற்றைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான துடிப்பு என்பனவற்றை நாம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. 

சீனாவிடமிருந்தும் சிங்கப்பூரிடமிருந்தும் உற்பத்தியை அதிகரிக்கும் முறைகள், உட்கட்மைப்பு அபிவிருத்தி உபாயங்கள் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளாது, அவற்றின் அடக்குமுறை வழிவகைகளை மட்டும் பின்பற்ற விளைவதன் நோக்கம், ஆட்சியாளர்கள் தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளல், அதிகாரத்தைப் பலப்படுத்தல் என்பதாகவே அமைகிறது. 

சமூக ஊடகங்களுக்கு முற்பட்ட காலத்தில், அரச ஊடகம் அரசாங்கத்தின் கைப்பிள்ளையாக இருந்த நிலையில், தனியார் ஊடகங்களை சாம, தான, பேத, தண்டங்களினூடாகத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதன் மூலம், மக்களின் தகவலறியும் உரிமையை பெருமளவுக்குக் கட்டுப்படுத்தும் கைங்கரியத்தை ஆட்சியாளர்கள் முன்னெடுத்தார்கள். 

 ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துகளைத் வௌிப்படுத்திய தனியார் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுதல், ஊடகவியலாளர்கள் காணாமல் போதல், கொல்லப்படுதல் என்பவை எல்லாம் நாம் காணாததல்ல. ஆனால், சமூக ஊடகங்களின் வருகை, வல்லாட்சியாளர்களுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

தன்னைப் பெரும் மரியாதைக்குரிய நபராகக் காட்டிக்கொள்ள விளையும் ஆட்சியாளர் ஒருவர், மிக முக்கியமானதாகக் கருதி வௌியிட்ட ‘பேஸ்புக்’ கருத்துக்கு ‘ஹஹா’ போட்டுச் சிரிக்கும் நபர்களை, அவர்களால் கட்டுப்படுத்த முடியாதது, அவர்களின் ஈகோவை பெருமளவு பாதிப்பதுடன், இரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லைத்தான். 

இதேபோலத்தான், பெரும் அரசியல் பின்புலத்திலிருந்து வந்து, நாட்டின் செல்வாக்கு மிக்க ஊடகமொன்றை நடத்திக்கொண்டிருக்கும் ஒருவர், அவர் கூறிய அரைகுறைத்தனமான கருத்துக்காகப் பொதுவௌியில் சாதாரண குடிமக்களால் விமர்சிக்கப்படும் போது, அது அவரின் ஈகோவை மிகக் காயப்படுத்துவதாக அமைகிறது. பெரிய நிலைகளில் இருந்தாலும், தாழ்வுச்சிக்கல் நிறைந்த மனங்களால் நியாயமான விமர்சனங்களைக் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆகவேதான், தணிக்கை, போர்க்கால அறை அமைத்து கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலுதல் ஆகிய வல்லாதிக்க சிந்தனைகளை அவர்கள் வௌிப்படுத்துகிறார்கள். 

“ஜனநாயகம் என்பது சிக்கலானதுதான். ஜனநாயகத்துக்கு எதிரான மிகச் சிறந்த வாதம் சராசரி வாக்காளருடனான ஐந்து நிமிட உரையாடலாகும்” என்றார் சேர் வின்ஸ்டன் சேர்ச்சில். ஆனால், அவரேதான், “ஜனநாயகம் மிகச் சிறந்தது என்று யாரும் பாசாங்கு செய்யவில்லை. அவ்வப்போது முயற்சிக்கப்பட்ட மற்ற அனைத்து ஆட்சி வடிவங்களிலும் ஜனநாயகம் மோசமான தன்மை குறைந்தது” என்றும் தெரிவித்தார். 

சுருக்கமாகச் சொன்னால், இதுவரை மனிதன் முயற்சித்த எல்லா ஆட்சி வடிவங்களிலும், ஜனநாயகமே ஒப்பீட்டளிவில் சிறந்ததாக இருக்கிறது. அதற்குக் காரணம், அது தனி மனித உரிமைகளையும் சுதந்திரங்ளையும் மதிக்கிறது. வல்லாட்சியைத் தடுப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டமைகிறது. 
வெறும் தேர்தல்கள் மட்டும்தான் ஜனநாயகம் என்பது பொய். தனி மனித சுதந்திரங்களும் உரிமைகளும் இல்லாத நாடு, வெற்றுத் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றுவதால் ஜனநாயக நாடாகிவிடாது. ஆனால், இந்த தனி மனித உரிமைகளும் சுதந்திரங்களும் வல்லாட்சி நோக்கும், அதனை அடைந்துகொள்வதற்கான அடக்குமுறைச் சிந்தனைகளும் கொண்ட ஆட்சியாளர்களுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் உவப்பானதாக இருப்பதில்லை. 

ஆகவேதான் தனிமனித உரிமைகளை அடக்கியாள அவர்கள் முனைகிறார்கள். தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் இத்தகைய ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களது அடிவருடிகளிடமிருந்தும் மக்கள் கண்ணுங்கருத்துமாகப் பாதுகாப்பது அவசியம். சுதந்திரங்களும் உரிமைகளும் ஒருமுறை பறிபோய்விட்டால், அதனை மீட்பதற்கு மனிதகுலம் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதற்கு உலக வரலாறே சாட்சி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X