Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
தொழில்நுட்பம் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறி, நவீன சாதனங்களும் முறைகளும் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதன் பிரதிகூலங்களும் அல்லது அந்த நவீன தொழில்நுட்பத்தின் தவறான பயன்பட்டால் ஏற்படுத்தப்படக்கூடிய மறை விளைவுகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.
பேஸ்புக் மூலம் ஒருவர் ஏமாற்றப்பட்டார், இணையம் மூலம் மோசடி என்பன தொடக்கம், சக்திப் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அணுசக்தி மூலமான ஆயுதங்களின் பயன்பாடு என, இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதில் முக்கியமானதொன்று தான், திறன்பேசிகள், நவீன கமெராக்கள் மூலம் எடுத்து வெளியிடப்படும் அந்தரங்கக் காணொளிகள். பலரது வாழ்க்கைகளை இந்தக் காணொளிகள் இல்லாமற்செய்திருக்கின்றன, பலரது உயிர்களைப் பறித்திருக்கின்றன, பலருக்கு சமூக மட்டத்திலான அந்தஸ்தைக் குறைத்திருக்கின்றன, வெகுசிலருக்கு வாழ்க்கையினை வழங்கியிருக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில், கிம் கார்டர்ஷன் போன்ற சிலருக்கு, இவ்வாறான காணொளிகள் பிரபலத்தன்மையை வழங்கி, அவர்களை மாபெரும் நட்சத்திரங்களாக்கியிருக்கின்றன. இலங்கை போன்றதொரு கீழைத்தேய நாட்டில், இந்தக் காணொளிகள் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியன.
அந்தரங்கக் காணொளிகள் எனச் சொல்லப்படுபவை, பிரதானமாக மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட முடியும். இருவர் இணைந்து இருவருக்கும் தெரிந்து எடுக்கப்பட்ட அந்தரங்கக் காணொளி, அந்த உறவில் ஏற்பட்ட முறிவு அல்லது வேறு காரணங்களுக்காக, அதிலொருவரால் மற்றவரின் அனுமதியின்றி வெளியிடப்படுவது அதில் முதல் வகையாகும். பழிவாங்கல் பாலியல் படங்கள் என இவற்றை அழைப்பார்கள். இரண்டாவது, உறவில் வைத்து அல்லது தனிப்பட்ட நபரொருவர் தன்னுடைய தனிப்பட்ட அந்தரங்கக் காட்சிகளைப் படம்பிடித்து வைத்திருந்த போது, அவரின் அல்லது
சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி, மூன்றாம் நபரொருவர் அக்காட்சிகளை வெளியிடுவதாகும். வவுனியாவைச் சேர்ந்த குறும்பட நடிகையொருவரின் தனிப்பட்ட காணொளியொன்று அண்மையில் வெளியாகி, இணையத்தில் அதிகமான கலந்துரையாடல்களையும் அதிகமான எதிர்வினைகளையும் தோற்றுவித்திருந்தது. இச்சம்பவம், இந்த வகையினது என்றே தெரிவிக்கப்படுகிறது. மூன்றாவது, உறவில் ஈடுபடும் போது, உறவில் ஈடுபடும் மற்றையவரின் அனுமதியின்றி, ஒருவர் இரகசியமாக எடுத்து, வெளியிடப்படும் அந்தரங்கப் படங்கள் ஆகும்.
இதில், முதலாவது வகையோடு ஒப்பிடும் போது இரண்டாவது, மூன்றாவது வகைகள் சற்று இலகுவாகத் தடுக்கப்படக்கூடியன. அதிகமானளவு கவனத்துடன் இருந்தால், இந்த வகையான முயற்சிகளை ஓரளவு தடுக்கக்கூடியதாக இருக்கலாம். ஆகவே, ஆடை நிலையங்களில் உடைமாற்றும் அறைகளில் இரகசிய கமெராக்கள் காணப்படுகின்றனவா, புதிதாக ஒருவருடன் நெருக்கமாக உறவாடும் போது, அங்கு கமெராக்கள் காணப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா, அவ்வாறான நம்பிக்கைக்குரிய நபரா அவர் என, சற்று அதிகமான யோசனையை வெளிப்படுத்த வேண்டும். தவிர, அந்தரங்கப் படங்கள் உங்களுடைய மடிக்கணினியில் அல்லது திறன்பேசிகளில் காணப்பட்டால், அவற்றைத் திருத்துவதற்கோ அல்லது இன்னொருவருக்கோ வழங்குவதற்கு முன்னர், அவற்றை அழித்துவிட்டு வழங்குவது அவசியமானது. வெளியாகும் அந்தரங்கப் படங்களில் கணிசமானவை, திருத்த வழங்கப்படும் திறன்பேசிகள் அல்லது கணினிகளில் காணப்பட்டவை, அங்கு திருத்துபவர்களால் வெளியிடப்பட்டவையாகவே இருக்கின்றன என்பது, இவ்விடயத்தில் அதிகபட்ச அவதானத்தை வெளிப்படுத்தக் கோருகிறது.
முதலாவது வகையென்பது சற்றுச் சிக்கலானது. ஒருவருடனான உறவில் இருக்கும் போது, அவரை முழுமையாக நம்பியே நீங்கள் அவரோடு இருக்கிறீர்கள். ஆகவே, அவரில் ஏற்படும் மாற்றமென்பது அல்லது அவரின் உண்மையான குணத்தை அறிய முடியாது போதலென்பது துரதிர்ஷ்டவசமானது.
அத்தோடு, மிகவும் பலமான நிலையிலிருந்த பின்னரே அனேகமான உறவுகள் திடீரென முறிந்து போகின்றன. இருவரும் மனதாலும் உடலாலும் மிகவும் நெருக்கமாக உணரும் போது, அந்தரங்கமான புகைப்படங்கள் அல்லது காணொளிகளென்பவை சாதாரணமானவை தான். அந்தரங்கமான புகைப்படங்களோ அல்லது காணொளிகளோ, கட்டாயமாக உறவு கொள்வதைக் காட்டுவதாக இருக்க வேண்டுமென்றில்லை. முத்தமிடுவது கூட அந்தரங்கமானது தான், எமது சமூகத்தைப் பொறுத்தவரை. ஆகவே, அந்தரங்கமான படங்களை எடுக்காதீர்களென்பது இதற்கான தீர்வு கிடையாது.
அத்தோடு, வீதியில் விபத்துகளைத் தடுப்பதற்கு வாகனங்களைத் தடை செய்ய முடியாது. மின்சாரத்தால் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கு மின்சாரத்தையே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. மாறாக, அவ்வாறான விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தே நாம் ஆராய்கிறோம். இங்கும், அவ்வாறானதொரு சிந்தனையே தேவைப்படுகிறது.
முதலில், அந்தரங்கமான புகைப்படங்கள் வெளியிடப்படுதலென்பது வாழ்க்கையே முடிவடைந்தமைக்குச் சமனானது என்ற நேர்மறையான எண்ணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. எம் அனைவருக்கும் அந்தரங்கமான ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. அதில், வெகுசிலரின் அந்தரங்கங்கள் மாத்திரமே வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே, ஒருவரின் அந்தரங்கமான காட்சிகள் வெளியானதும், அவரின், குறிப்பாக அதில் பெண் சம்பந்தப்பட்டிருந்தால் அவரது, வாழ்வு நிறைவடைந்துவிடவில்லை என்ற கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அண்மையில் வவுனியாவில் வெளியான காணொளியை அந்தப் பெண்மணி எதிர்கொண்ட விதம் இதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
தமிழக சினிமா நடிகைகள் போல, 'அதிலிருப்பது நானல்ல', 'யாரோ என்னைப் போல் ஒருவரைப் பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள்' என பிரச்சினையிலிருந்து நழுவிவிடாமல், 'அதில் இருப்பது நான் தான். அலைபேசியைத் திருத்தக் கொடுக்கும் போது, அந்தக் காணொளி வெளியாகிவிட்டது. அதைப் பற்றிக் கதைத்து, உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்' எனத் தெளிவாக, நேரடியாக தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஒரு பெண்ணினது அந்தரங்கமான காட்சிகள் வெளியானதால் மாத்திரம் அவர் தவறானவராகவோ, மோசமானவராகவோ மாறிவிடப் போவதில்லை. ஆகவே, இவ்வாறான துணிவான மனப்பாங்கினை வெளிப்படுத்தினால், இவ்வாறான காட்சிகளொன்றும் ஒருவரது வாழ்வை முடித்துவிடாது என்பதை உறுதிப்படுத்தினால், ஒருவரைப் பழிவாங்குவதற்காக இவ்வாறான காட்சிகள் வெளியாகுவது குறைவடையும். எங்கெல்லோம் எதற்கெல்லாம் வரவேற்பு அல்லது எதிர்வினைகள் அதிகமாக இருக்கின்றனவோ, அவையெல்லாம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.
அத்தோடு, பாதிக்கப்படுபவர்களைக் குற்றஞ்சாட்டும் மனநிலையும் இல்லாதொழிக்கப்பட வேண்டும். வன்புணர்வுக்குள்ளாக்கப்படும் பெண்களைக் குற்றஞ்சாட்டும் நடைமுறை குறைவடைந்து வருகிறது, இல்லாவிடில், அவ்வாறு குற்றஞ்சாட்டுவது தவறென்பதை எடுத்துக்காட்டும் அளவு அதிகரித்து வருகிறது, அதேபோல் தான், ஒருவரது அந்தரங்கமான காணொளிகளோ அல்லது புகைப்படங்களோ வெளிவரும் போது, 'அந்தப் படங்களை எடுத்தது தவறு', 'படம் எடுத்ததால் தானே இது வெளிவந்தது? படத்தை எடுக்காமலிருந்திருக்கலாம்', 'இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமலிருக்க, இவ்வகையான படங்களை எடுக்காமலிருப்பது தான் தீர்வு' போன்றவாறான பாதிக்கப்பட்டவர்களைக் குற்றஞ்சாட்டும் மனநிலையிலிருந்து விடுபட வேண்டிய தேவையிருக்கிறது.
அதைவிட முக்கியமானது, இவ்வாறான தனிப்பட்ட காட்சிகளையும் புகைப்படங்களையும் வெளியிடும் நபர்கள் மீதான எதிர்ப்பு, அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கை. ஒருவரது அந்தரங்கப் புகைப்படங்களை, அவரது அனுமதியின்றி வெளியிடுவதென்பது குற்றமாகும். ஆகவே, இவ்வாறான புகைப்படங்களை அல்லது காணொளிகளை வெளியிடுபவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து, கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான புதிய பிரச்சினைகளுக்குப் பொருத்தமான தெளிவான தண்டனைகள் இல்லாத நிலையில், அவற்றை இயற்றுவதற்கான அழுத்தத்தை, மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்போருக்கு வழங்க வேண்டும்.
ஆகவே, இவ்வாறான காணொளியொன்று அடுத்த முறை வெளியாகும் போது, அதில் காணப்படும் நபரைக் குற்றஞ்சாட்டாமல், 'இவ்வாறானதொரு அந்தரங்கமான விடயத்தைப் பகிரங்கப்படுத்தியிருக்கும் அதை வெளியிட்ட நபர், ஒருவரது தனி உரிமைகளைப் பாதித்திருக்கிறார். இது சட்டரீதியாகக் குற்றமென்பதோடு, ஒருவரது நம்பிக்கைக்குச் செய்யும் துரோகமாகும். இவ்வாறான தீயவர்களை எமது சமூகத்தில் இனங்கண்டு, தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன், ஏனையோர் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடாமலிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்' என்று சொல்ல ஆரம்பித்தோமானால், இவ்விடயத்தில் முன்னேற்றமேற்படும் என்பது யதார்த்தம்.
அத்தோடு, இவ்வாறான காணொளிகள் வெளியாகும் போது, நீங்கள் அங்கத்தவர்களாக இருக்கும் வட்ஸ்அப் குழுமங்களிலும் பேஸ்புக் குழுமங்களிலும் மின்னஞ்சல் குழுமங்களிலும், அவற்றைப் பகிராமல் இருந்துகொள்ளுங்கள். அதுவும் அவசியமானது.
PADAM Tuesday, 24 November 2015 08:31 PM
PLESR
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
46 minute ago
2 hours ago
4 hours ago