2025 மே 01, வியாழக்கிழமை

அமெரிக்காவிலும் அளுத்கமவிலும் இரு சம்பவங்கள்;

மொஹமட் பாதுஷா   / 2020 ஜூன் 12 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரு வார காலத்துக்கு முன்னர், உலகின் இரு வேறுபட்ட பிராந்தியங்களில் இடம்பெற்ற இரு சம்பவங்கள், உலகில் வாழும் மனிதநேயமுள்ள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மே 25ஆம் திகதி, முதலாவது சம்பவம் அமெரிக்காவிலும் இரண்டாவது சம்பவம் அதேதினத்தில் இலங்கையிலும் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்கப் பொலிஸ் காவலில் இருந்த ஜோர்ஜ் புளொயிட் என்ற சந்தேகநபர், பொலிஸ் அதிகாரியாலேயே கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், அமெரிக்காவில் மட்டுமன்றி, வேறுபல நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

கறுப்பினத்தவருக்கு எதிரான அடக்குமுறையாக, இது அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் சீறிப் பாய்வதைக் காண முடிகின்றது. 

'உலகத்தின் பொலிஸ்காரர்' என்ற அடையாளத்தோடு, உலகையே ஆட்டிப்படைத்த அமெரிக்க வெள்ளை மாளிகை, இன்று ஆடிப் போயுள்ளது. ட்ரம்ப், அஞ்சி நடுங்கிப் போயுள்ளார்.

அமெரிக்காவின் இராணுவக் கெடுபிடிகள், மேற்குலகின் இனப் பாகுபடுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராக, உலகமக்கள் மனங்களில் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள், மேற்கிளம்பி இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

இதேவேளை, இலங்கையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்த வேளையில், அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன், பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம், உள்நாட்டில் மனித உரிமை ஆர்வலர்களால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தர்காநகர், அம்பகஹ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த காவலரணில், தாரிக் என்ற 14 வயதுச் சிறுவன் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர், அச்சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அத்துடன், சட்ட வைத்திய அதிகாரியால், இனரீதியாக நிந்திக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மனநிலை சரியில்லாத சிறுவன், பொறுப்பான பதவியில் உள்ள அதிகாரிகளால், இவ்வாறு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டோர் தண்டிக்கப்படுவது அவசியம் என்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

இதையடுத்து அரசாங்கம், குறித்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பெண்கள், சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு எதிரான பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கீழ், இவ்விசாரணைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கமைய, சம்பந்தப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் இடம்பெற்ற சம்பவத்துடன் ஒப்பிடும் போது, இலங்கையில் சிறுவன் தாரிக் தாக்கப்பட்டமை, ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்பைக் கொண்டது என்றாலும், இரண்டும் ஒரே விதமான பாரபட்சத்தின் வெளிப்பாடுகள் ஆகும்; இரண்டுமே மனித உரிமை மீறல்கள் என்பதை, யாரும் மறுக்க முடியாது.

'சட்டம், எல்லோருக்கும் பொதுவானது' என்று சொல்லப்படுகின்ற போதும், அது வலிமையற்றோர், அதிகாரமற்றோர் மீதே, அதிகளவில் தனது பலத்தைப் பிரயோகித்துப் பார்க்கின்றதா என்ற கேள்வி, மீண்டும் எழுந்திருக்கின்றது.

இலங்கையில் கூட, இதற்கு முன்னரும் பலதடவை இவ்வாறான நிலைமைகளை நாம் அவதானித்து இருக்கின்றோம். அரசியல்வாதிகள், அதிகாரமுள்ளோர், பணம்படைத்தோர், உயர்தட்டு வர்க்கத்தினர் போன்றோர் தவறுகள், குற்றங்கள் போன்றவற்றைச் செய்து விட்டு, லாவகமாகத் தப்பித்துக் கொள்வதையும் வலிமையற்ற குடிமக்கள் மீது, சட்டத்தின் பிடி இறுகுவதையும் கண்டிருக்கின்றோம்.

அமெரிக்கா தொடக்கம், இலங்கை வரை, இந்நிலைமைகள் மாற வேண்டும்!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .